வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த வானிலை விளக்கத்தில் கூறியதாவது-
குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காணப்பட்டது. இது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து குமரிக்கடல், கேரளா ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் மையம் கொண்டிருக்கிறது.
இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரங்களுக்கு பல இடங்களில் மிதான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இன்றும் நாளையும் தெற்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகரில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.