தமிழக கடலோர மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில், தமிழக கடலோர மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமுட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் தரங்கம்பாடி, மணல்மேடு, காரைக்கால், திருவாரூர் மாவட்டம் குடவாசல், நன்னிலம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, குமிடிப்பூண்டி, தஞ்சை மாவட்டம் ஆடுதுரை ஆகிய பகுதிகளில் தலா ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழைக்கான இயல்பான மழை அளவு எட்டப்பட்டுவிட்டது. தமிழ்நாடு, புதுச்சேரிக்கு மழையைத் தரும் வடகிழக்கு பருவமழையின் சராசரி மழை அளவு 44 செ.மீ. என்பதாகும்.
நேற்று வரை பதிவான அளவிலேயே இந்த அளவு கிடைத்துள்ளது. இருப்பினும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை அளவு சராசரியை விட குறைவாக பதிவாகியுள்ளது.