This Article is From Oct 06, 2018

நாளை தமிழகத்துக்கு 'ரெட் அலெர்ட்' மழை எச்சரிக்கை; உஷார் நிலையில் அரசு!

நாளை மாநிலத்தின் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையது தெரிவித்து, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது

நாளை தமிழகத்துக்கு 'ரெட் அலெர்ட்' மழை எச்சரிக்கை; உஷார் நிலையில் அரசு!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை மாநிலத்தின் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இன்றைய வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம், 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கும் ஒரு சில இடங்களில் மிதமான மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும். அதேபோல மாநிலத்தின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதே நேரத்தில் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்' என்று தெரிவித்துள்ளது.

மேலும், 'தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, அடுத்துவரும் இரு தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் தொடர்ந்து புயலாகவும் வலு பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக்கூடும்.

தென் மேற்கு பருவமழை வட இந்திய பகுதிகளிலிருந்து அடுத்து வரும் 3 தினங்களில் படிப்படியாக விலகி, வரும் அக்.8 ஆம் தேதி வடகிழக்கு பருவமழையாக தொடங்குவதற்கான சூழ்நிலை நிலவுகிறது' என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

.