தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை மீண்டும் ஒரு பெரும் மழை பொழிவைக் கொண்டு வருமா என்பது குறித்து, பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘டிசம்பர் மாத 15 ஆம் தேதி வரை அனைவரும் பொறுமைக் காக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு மீண்டும் மழை இருக்கிறது. ஆனால் அந்த மழை, குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவா, புயலாலா அல்லது தாழ்வுப்பகுதி காரணமாகவா என்பது சரியாக தெரியவில்லை. அது காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னைப் பகுதியில் மழையைக் கொண்டு வருமா அல்லது டெல்டா பகுதியில் கொட்டித் தீர்க்குமா என்பதிலும் தெளிவில்லை.
ஆனால், ஒரேயொரு விஷயம் உறுதி. சென்னையில், இந்த முறை மிகக் குறைவாகவே மழை பெய்துள்ளது. இதனால், கோடைக் காலத்தில் நமக்கு மிகப் பெரிய நீர்ப் பற்றாக்குறை இருக்கும். அடுத்ததாக வரவுள்ள மழையைப் பற்றி சரியாக கணித்து சொல்ல இன்னும் சில நாட்கள் ஆகும்' என்று முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார் வெதர்மேன்.
அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு, 31 சென்டி மீட்டர். இந்தக் காலக்கட்டத்தின் சராசரி அளவு 35 செ.மீ ஆகும். இது இயல்பைவிட 12 சதவிதம் குறைவாகும்.