This Article is From Nov 23, 2018

‘மழை படிப்படியாக குறையும்!’- வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்

இன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

‘மழை படிப்படியாக குறையும்!’- வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மற்றும் வடக்கு தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு இருந்தது. இந்நிலையில் இன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘நேற்று தமிழகத்தின் உள் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துவிட்டது. மேலும் குமரிப் பகுதி முதல் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் வரை வளி மண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது. ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 18 சென்டி மீட்டர் மழையும், மதுராந்தகத்தில் 14 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் மிதமான மழை இருக்கும். ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக் கூடும். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய தென் தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும்.

23 மற்றும் 24 ஆம் தேதி முதல் படிப்படியாக மழை குறையும். மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் இல்லை. அவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லலாம்.

கடந்த 9 ஆம் தேதி முதல் இன்று வரை சென்னையில் 32 செ.மீ மழை பெய்திருக்கிறது. இந்த காலக்கட்டத்தின் சராசரி அளவு 57 செ.மீ ஆகும். இது இயல்பைவிட 44 சதவிகிதம் குறைவு.

அதேபோல தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த 9 ஆம் தேதி முதல் இன்று வரை 27 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தின் சராசரி அளவு 33 செ.மீ ஆகும். இது இயல்பை விட 13 சதவிகிதம் குறைவு ஆகும்' என்று கூறியுள்ளார்.


 

.