உற்சாகத்துடன் இசைக் கருவிகளை இசைக்கும் ராகுல் காந்தி.
Raipur: சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகரில் பழங்குடியின மக்களின் 3 நாட்கள் நடனத் திருவிழாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்கி வைத்தார். அப்போது, பழங்குடியின மக்களுடன் சேர்ந்து மேள தாளம் வாசித்த ராகுல், அவர்களுடன் நடனமும் ஆடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த திருவிழா குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், 'தனித்துவம் மிக்க இந்த திருவிழா நமது நாட்டின் பழங்குடியின மக்களுடைய வளமான கலாசாரத்தை பாதுகாக்கவும், அதனை வெளிப்படுத்தவும் உதவும்' என்று தெரிவித்துள்ளார்.
பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, பாரம்பரியம் மிக்க தலைப்பாகையை ராகுல் அணிந்திருந்தார்.
ராகுல் காந்தி தனது இன்னொரு ட்விட்டர் பதிவில், 'பஸ்தார் பகுதியின் அபுஜமாத்தில் தண்டாமி மாடியா என்ற புகழ்பெற்ற நடனம் பழக்கத்தில் இருந்து வருகிறது. இதனை கோர் நடனம் என்றும் அழைப்பார்கள். ஆண்களும், பெண்களும் கூடி இந்த நடனத்தை ஆடுவார்கள். அப்போது ஆண்கள் காட்டெருமையின் கொம்பு போன்ற தலைப்பாகையை அணிந்து மேளத்தை இசைப்பார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு, ராகுலுடன் நடனம் ஆடினார்கள்.
சத்தீஸ்கரில் முதன்முறையாக பழங்குடியின மக்களின் நடனத்திருவிழா ஒருங்கிணைப்பு செய்யப்படுகிறது.
இதில் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 1,350 பழங்குடியின மக்கள் கலந்து கொள்கின்றனர். இதேபோன்று 6 நாடுகளை சேர்ந்தவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இந்த தகவலை சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது.
29 நடனக் குழுக்கள் 43 வகையான நடனத்தை அரங்கேற்றுகின்றனர்.
திருமணம், திருவிழா, விவசாயம் உள்ளிட்டவற்றை மையமாக கொண்ட கிராமிய நடனங்களுக்கு இடையே போட்டி நடைபெறும். இந்த திருவிழா இன்று காலை 11.45க்கு தொடங்கியது.
நாளை குஜராத்தின் வசவா நடனம், ஆந்திராவின் திம்சா, திரிபுராவின் மமிதா நடனம் உள்ளிட்டவை அரங்கேறுகின்றன.
3-வது நாள் விழாவின்போது உத்தரகாண்டின் லஷ்பா, ஜம்முவின் பகர்வால், மத்திய பிரதேசத்தின் பதாம், இமாச்சல பிரதேசத்தின் கட்டி, கர்நாடகா, சிக்கிம் மாநிலங்களின் கிராமிய நடனங்கள், ஜார்க்கண்டின் டம்காச், தண்டேவாடா மாவட்டத்தின் தண்டாமி நடனங்கள் அரங்கேற்றப்படும்.
மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆனந்த் சர்மா, அகமது படேல், மோதிலால் வோரா, முன்னாள் எம்.பி. வேணுகோபால், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த திருவிழாவில் கலந்து கொள்கின்றனர்.