This Article is From Sep 29, 2018

“வெளிநாட்டில் மருத்துவம் படிப்பதற்கான தகுதி சான்றிதழில் மாற்றம்” - உயர் நீதிமன்றம்

வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு, 80% மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

“வெளிநாட்டில் மருத்துவம் படிப்பதற்கான தகுதி சான்றிதழில் மாற்றம்” - உயர் நீதிமன்றம்

80%க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

Chennai:

வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு, 80% மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வன் என்பவர், தமிழகத்தில் மருத்துவ பயிற்சி பெற, பதிவு சான்றிதழ் வழங்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்தார். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அவரது கோரிக்கைளை பரிசீலனை செய்யுமாறு கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தார். மேலும், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கான தகுதிச்சான்று வழங்கப்படுவது குறித்து பதில் அளிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள இந்திய மருத்துவக் கவுன்சில், 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை படித்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்படுவதாக கூறியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, இந்தியாவில் 95% மதிப்பெண் பெற்ற மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை உள்ள போது, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர 80%க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.