எம்.என்.எஸ். எனப்படும், மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா என்ற கட்சியின் தலைவராக உள்ளார் ராஜ் தாக்கரே.
Mumbai: எம்.என்.எஸ். தலைவர் ராஜ் தாக்கரே, பாஜகவின் தேவேந்திர பட்னாவீசை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ராஜ் தாக்கரே பாஜகவில் இணைவார் என பேசப்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.
சிவசேனா கட்சியை ஏற்படுத்திய பால் தாக்கரேவின் தம்பி ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன்தான் இந்த ராஜ் தாக்கரே ஆவார். முதலில் சிவசேனா கட்சியில் இருந்த ராஜ் தாக்கரே, பால் தாக்கரேவின் மகன் உத்தவுக்கு முக்கியத்துவம் அதிகம் அளிக்கப்பட்டு வருவதாக கருதி, கட்சியில் இருந்து விலகினார். பின்னர் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா என்ற கட்சியை ராஜ் தாக்கரே நிறுவினார்.
மக்களவை தேர்தலின்போது, மகாராஷ்டிராவில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்திருந்தன. அப்போது இந்த இரு கட்சிகளுக்கு எதிராக ராஜ் தாக்கரே பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
இதற்கிடையே, மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை நிறுவியது. தனது அண்ணனான உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவியேற்பு விழாவில் ராஜ் தாக்கரே கலந்து கொண்டார்.
பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியதால், பாஜகவுடன் ராஜ் தாக்கரே சேர்ந்து கொள்வார் என்று தகவல்கள் பரவின.
இந்த சூழலில், பாஜகவின் தேவேந்திர பட்னாவீசை ராஜ் தாக்கரே இன்று சந்தித்து பேசியிருக்கிறார். இதனால் ராஜ் தாக்கரே பாஜகவில் சேரக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.