3 நாட்கள் அமைதிக்கு பின் நேருக்கு நேர் சந்திக்க உள்ள அசோக் கெலாட், சச்சின் பைலட்!
New Delhi/ Jaipur: காங்கிரஸ் தனது ராஜஸ்தான் அரசு நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி அறிவித்த மூன்று நாட்களுக்கு பின்னர் தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டை இன்று நேருக்கு நேர் சந்திக்க உள்ளார் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலோட்.
ராஜஸ்தான் சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு ஒரு நாள் முன்னதாக, இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை சந்தித்த பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். அவரது குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ளது காங்கிரஸ் தரப்பு.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இந்த உடன்படிக்கை குறித்து "இயல்பாகவே வருத்தப்படுகிறார்கள்", ஆனால் எல்லோரும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று ஆசோக் கெலாட் கூறியுள்ளார். மேலும், அனைவரும் மறந்து மன்னியுங்கள் என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், "எம்.எல்.ஏக்கள் வருத்தப்படுவது இயல்பானது. இந்த அத்தியாயம் நிகழ்ந்த விதம் மற்றும் அவர்கள் ஒரு மாதம் தங்கியிருந்த விதம் இயற்கையானது. நான் அவர்களுக்கு விளக்கினேன், சில சமயங்களில் நாம் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் நாடு, அரசு, மக்களுக்கு சேவை செய்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் ”என்று அவர் கூறினார்.
நாம் தவறுகளை மன்னித்து ஜனநாயகத்தின் பொருட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும். 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் எனக்கு ஆதரவாக நின்றனர். அதுவே குறிப்பிடத்தக்கதாகும் என்றார்.
அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஜெய்ப்பூருக்குத் திரும்பி, அதிருப்தி எம்எல்ஏக்களின் நெருக்கடியின் போது அவர்கள் தங்கியிருந்த அதே ரிசார்ட்டான ஃபேர்மாண்டிற்கு நேராக அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து கெலாட் தனது பாதுகாப்பை கைவிடவில்லை என்பதற்கான அறிகுறியாக, வெள்ளிக்கிழமை அமர்வு வரை அவர்கள் அங்கேயே இருக்கக்கூடும் என தெரிகிறது.
திட்டமிட்டப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு இருக்குமா என்பதை மாநில அரசு இன்னும் கூறவில்லை. ஆனால், முதல் நாள் முதல்வர் தனது பெரும்பான்பான்மையை நிலைநாட்ட விரும்புவார் என்று தெளிவாகிறது.