This Article is From Jul 30, 2020

ஆகஸ்ட்.14ல் ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்டலாம்: ஆளுநர் ஒப்புதல்!

ராஜஸ்தான் சட்டமன்றத்தை ஆகஸ்ட் 14ம் தேதி கூட்டுவதற்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஆகஸ்ட்.14ல் ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்டலாம்: ஆளுநர் ஒப்புதல்!

ராஜஸ்தான் சட்டமன்றத்தை ஆகஸ்ட் 14ம் தேதி கூட்டுவதற்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Jaipur:

ராஜஸ்தானில் ஆகஸ்ட் 14ம் தேதி சட்டப்பேரவையை கூட்டுவதற்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் வழங்கியுள்ளார். 

சட்டமன்றத்தை கூட்டுவது தொடர்பாக ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா மற்றும் முதல்வர் அசோக் கெலாட் இடையே முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையில், ராஜஸ்தான் சட்டமன்றத்தை ஆகஸ்ட் 14ம் தேதி கூட்டுவதற்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையே உட்கட்சி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போர்க்கொடி தூக்கிய சச்சின் பைட்டை துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது

சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, சபாநாயகர் தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றபோதிலும், இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றமே முடிவு செய்யும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, தங்கள் வசம் பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால் ராஜஸ்தான் மாநில சட்டசபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கெலாட் தரப்பு முயற்சித்து வந்தது. 

ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்டக் கோரி, ஆளுநர் ஒப்புதலை பெற முதல்வர் அசோக் கெலாட் ஏற்கனவே மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருந்தார். எனினும், மூன்று முறையும் ஆளுநர் ஏதேனும் காரணத்தை கூறி மறுப்பு தெரிவித்து வந்தார். 

இதைத்தொடர்ந்து, நான்காவது முறையாக அனுப்பிய கோரிக்கையை தற்போது ஆளுநர் ஏற்றுள்ளார். அதில், முதல்முறையாக சட்டப்பேரவையை கூட்டுவதற்கு கோரிக்கை விடுத்திருந்த நாளை கணக்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 21 நாட்களை கணக்கீட்டு புதிய தேதிக்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

மேலும், ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், கொரோனா நோய்தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

.