ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்ததாக கஜேந்திர சிங் சேகாவத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Jaipur: ராஜஸ்தான் மாநிலத்தில் சமீப காலமாக நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், தற்போதைய அசோக் கெஹ்லாட் அரசாங்கத்தினை கலைப்பதற்கு சதி செய்ததாக அதிருப்தி எம்.எல்.ஏ பன்வர் லால் சர்மாவுடன் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அசோக் கெஹ்லோட் அரசாங்கத்திற்கு எதிராக பாஜகவுடன் சதித்திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு வழக்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் மீது பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபரான சஞ்சய் ஜெயின் என்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜகவுடன் அவரது தொடர்பினை பாஜக மறுத்துள்ளது.
பாஜகவுடன் ஆட்சியை கலைப்பதற்கு பேரம் பேசியதற்கான ஆடியோ உள்ளதாக கூறி, பன்வர் லால் சர்மா மற்றும் மற்றொரு அதிருப்தி எம்.எல்.ஏ விஸ்வேந்திர சிங் ஆகியோரையும் காங்கிரஸ் இடைநீக்கம் செய்துள்ளது.
“இரண்டு ஆடியோ பதிவுகள் வெளிவந்துள்ளன, அதில் பான்வர் லால் சர்மா பாஜக தலைவர்களுடன் கலந்துரையாடினார். அந்தக் குரல்களில் ஒன்று ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவரும், "ஜல் சக்தியின்" மத்திய அமைச்சருமான ஷெகாவத்துக்கு சொந்தமானது என்று கட்சி கூறுகிறது.” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
இது குறித்த எந்த ஒரு விசாரணையையும் தான் ஏற்க தயாராக உள்ளதாகவும், ஆடியோவில் பதிவாகியுள்ள குரல் தன்னுடையது இல்லையென்றும் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆடியோவின் நம்பகத் தன்மை குறித்து என்.டி.டி.வி உறுதிப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.