காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்
New Delhi: ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வராக அசோக் கெலாட்டின் பெயரையும், துணை முதல்வராக சச்சின் பைலட் பெயரையும் காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநில முதல்வராக யாரை அறிவிப்பது என்ற குழப்பம் கடந்த 2 நாட்களாக காங்கிரசின் தலைமைக்கு இருந்து வந்தது. முதல்கட்டமாக அசோக் கெலாட்டின் பெயர்தான் முதல்வர் பொறுப்புக்கு அடிபட்டது. இதையடுத்து, சில இடங்களில் முக்கிய தலைவரான சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் பிரச்னையில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வராக அசோக் கெலாட்டையும், துணை முதல்வராக சச்சின் பைலட்டையும் நியமிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரியங்கா காந்தியும் பங்கேற்றிருக்கிறார்.
வழக்கமாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அறிவிப்பு ஜெய்ப்பூரில் வைத்துதான் நடைபெறும். இந்த முறை அதற்கு மாற்றமாக டெல்லியில் வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அசோக் கெலாட் ஏற்கனவே 2 முறை முதல்வராக இருந்தவர். 67 வயதாகும் அவருக்கு முதல்வர் பொறுப்பு வழங்குவது என்பது கட்சிக்கு ஆபத்தாக முடியும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2013-ல் ராஜஸ்தானில் காங்கிரசுக்கு 20 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். அப்போது, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக சச்சின் பைலட் பொறுப்பு ஏற்று, இன்று ஆட்சியை பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவருக்கு முதல்வர் பொறுப்பு அளிக்காததால் ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றம் காணப்படுகிறது.