பேச்சுவார்த்தை நடத்திய சச்சின் பைலட்: வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ப.சிதம்பரம் அறிவுரை!
New Delhi: ராஜஸ்தானில் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் உள்ளிட்ட பிற அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தகுதிநீக்க நோட்டீஸூக்கு எதிராக நேற்றைய தினம் நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துடன் சச்சின் பைலட் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடிய தூக்கிய சச்சின் பைலட்டை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் தொடர்ப கொள்ள முயற்சித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் என்டிடிவியிடம் கூறும்போது, சச்சின் பைலைட் நேற்று முன்தினம் என்னிடம் பேசியதாக தெரிவித்துள்ளார்.
தலைமை அவரை சந்திக்க விரும்புவதாக நான் மீண்டும் அவரிடம் தெரிவித்தேன். எந்த விஷயம் குறித்தும் விவாதித்துக்கொள்ளலாம். அதனால், வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு நான் அவருக்கு அறிவுறுத்தினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் சச்சின் பைலட்டை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்த போதும், அவர் எதற்கும் செவிச் சாய்க்காமல் இருந்து வந்தார்.
அப்படி இருக்கும்போது, முதல்முறையாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரை சச்சின் பைலட் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதுதொடர்பாக பிடிஐ வெளியிட்டுள்ள தகவலில், தென்பகுதியை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரை தொடர்பு கொண்ட சச்சின் பைலட் தான் மீண்டும் கட்சிக்கு திரும்புவதற்கான நிபந்தனைகளை தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவரிடம் காங்கிரஸ் கதவுகள் திறந்தே உள்ளன. ஆனால், எந்த ஒரு நிபந்தனைகளும் இல்லாமல் திரும்பி வர வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பி.சிதம்பரத்திற்கு முன்பு, பிரியங்கா காந்தியும் நேற்று முன்தினம் சச்சின் பைலட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.