இன்று காலை, “நான் பாஜகவில் இணையவில்லை” என்று உறுதிபட தெரிவித்துள்ளார் பைலட்.
ஹைலைட்ஸ்
- பைலட்டுக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கை தயாராகிறது காங்கிரஸ்
- பைலட்டை பேச்சுவார்த்தை அழைத்து வருகிறது காங்கிரஸ்
- பைலட்டின் அனைத்துப் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன
Jaipur/ New Delhi: ராஜஸ்தான் காங்கிரஸ் உட்கட்சிப் பூசல், முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. கட்சிப் பதவியும், அரசியல் பதவியும் நீக்கப்பட்ட பின்னரும் சச்சின் பைலட், “நான் இன்னும் காங்கிரஸ்காரன்தான்” என்று கூறி பரபரப்பை மேலும் கூட்டியுள்ளார். பைலட், காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைவார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அவரின் இந்தக் கருத்து காங்கிரஸையும் சற்று சாந்தப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ராஜஸ்தான் காங்கிரஸைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான அவினாஷ் பாண்டே, இன்று, “பைலட்டுக்கு இன்னும் காங்கிரஸின் கதவு திறந்தே இருக்கிறது. அவர், தான் செய்த தவறுகளை புரிந்து கொள்வார் என நம்புகிறேன்” என சூசக ட்வீட் போட்டுள்ளார்.
சச்சின் பைலட் மீது, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறது காங்கிரஸ் கட்சி. தன் சமீப கால ‘கலக' நடவடிக்கை குறித்து வரும் வெள்ளிக் கிழமைக்குள் பதில் அளிக்குமாறும் அப்படியில்லை என்றால், ஏன் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கூடாது என்றும் காங்கிரஸ் கேட்டுள்ளது.
இப்படியான நேரத்தில்தான் இன்று காலை, “நான் பாஜகவில் இணையவில்லை” என்று உறுதிபட தெரிவித்துள்ளார் பைலட். அவர், தன் கலகத்தை ஆரம்பிக்கும் முன்னரும் இதே கருத்தைத்தான் தெரிவித்தார். அதே நேரத்தில் சில நாட்களுக்கு முன்னர், ‘எனக்கு ஆதரவாக ராஜஸ்தானில் 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த பலத்தை வைத்து என்னால் சுலபமாக ஆட்சியைக் கவிழ்த்த விட முடியும்' என சவால்விட்டார்.
அவர் இப்படி வெளிப்படையாக போர்க் கொடி தூக்கியும், காங்கிரஸ் தரப்பு சற்று பின்வாங்கியபடியே செயல்பட்டது. தொடர்ந்து அவரைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. பைலட் தரப்பில் இருக்கும் முக்கிய கோரிக்கை, ‘ராஜஸ்தான் முதல்வர் பதவி'. ஆனால், காங்கிரஸ் அதைத் தவிர மற்ற அனைத்தையும் செய்துதர தயார் என்றது. பின்னர், இப்போது இல்லையென்றாலும், தற்போது நடந்து வரும் ஆட்சியின் கடைசி ஆண்டில் முதல்வராக நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசின் பதவிக் காலம் 2023 ஆம் ஆண்டோடு முடிவுக்கு வருகிறது.
தற்போது பிரியங்கா காந்தி வத்ரா, சச்சின் பைலட்டோடு நேரடி தொடர்பில் இருக்கிறார் என்று காங்கிரஸ் உள்வட்டாரங்கள் கூறுகின்றன. அதேபோல சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் தொடர்ந்து தங்களுக்கு நெருக்கமானவர்களை வைத்து பைலட்டிடம் பேசி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ராகுல் காந்திக்கு நெருக்கமாக உள்ள ஒருவர், NDTV-யிடம், “சச்சின் பைலட், ராகுல் காந்தியின் மனதில் இடம் பிடித்தவர். இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடும் நபர்கள். இருவருக்கும் பரஸ்பரம் மற்றவர்கள் மீது அதிக நன்மதிப்பு உள்ளது” என்றார்.
இன்று NDTV-யிடம் பேசிய பைலட், “கடந்த ஆண்டு ராகுல் காந்தி, தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர்தான், எனக்கு எதிரான நடவடிக்கைகளை ராஜஸ்தான் முதல்வர் அசோக் பைலட் தீவிரப்படுத்தினார்” என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இப்படி காந்தி குடும்பத்திற்கு மறைமுக ஆதரவாக பைலட் கருத்து தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பைலட்டுடன் தொடர்பில் இருக்கும் பாஜக தரப்பு, ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறதாம்.
இன்று காலை 10 மணிக்கு, நடந்து வரும் பிரச்னைகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக சச்சின் பைலட் நேற்று அறிவித்தார். பின்னர், இன்று மதியம் 1 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், அது ரத்து செய்யப்பட்டு விட்டது. தன் புதிய அணுகுமுறையில், காந்தி குடும்பத்தை மையத்தில் வைத்து பைலட் தெரிவித்துள்ள கருத்து, சமாதானத்துக்கு விட்ட தூதாகவே பார்க்கப்படுகிறது. இந்த புதிய உத்தியால் பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.