Rajasthan: சச்சின் பைலட்டுக்கு முதல் வெற்றி: சபாநாயகர் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!
New Delhi: சச்சின் பைலட் மற்றும் 18 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்கம் நோட்டீஸ் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை அளிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நீதிதமன்றம் தலையிட உரிமையில்லை என்று, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரிய ராஜஸ்தான் சபாநாயகரின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், ராஜஸ்தான் விவகாரத்தை குறிப்பிடாமல் ஜனநாயகத்தில் எதிர்ப்பின் குரலை அடக்க முடியாது என கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இன்னும் ஒரு நாள் தான் உள்ளது. உங்களால் ஏன் காத்திருக்க முடியாதா என்று கேள்வி எழுப்பினர். மேலும், நடுநிலை வகிக்கும் சபாநாயகர் ஏன் நீதிமன்றத்தை அணுக வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பினர்.
"ஒரு தலைவர் எம்எல்ஏக்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் அந்த கட்சியிலே நீடிக்கும் போது அவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது. பின்னர் இது ஒரு கருவியாக மாறிவிடும், யாரும் தங்களது குரலை எழுப்ப முடியாது. ஜனநாயகத்தில் எதிர்ப்பின் குரலை இப்படி அடக்க முடியாது" என்று நீதிபதி ஏ.கே.மிஸ்ரா, ராஜஸ்தான் நெருக்கடியைக் குறிப்பிடாமல் கூறினார்.
சபாநாயகர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கபில் சிபில், இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவு செய்யும் போது எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. கட்சி கூட்டங்களில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று கேள்வி எழுப்ப அவருக்கு உரிமை உள்ளது. இந்த கட்டத்தில் உயர்நீதிமன்றம் அவர்களுக்கு எந்தவொரு பாதுகாப்பு உத்தரவையும் வழங்க முடியாது என்று வாதிட்டார்.
தொடர்ந்து நீதிபதி மிஸ்ரா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால், தங்களது கருத்துகளை கூட வெளிப்படுத்த முடியாதா? அதற்கு பதிலளித்த கபில் சிபில், அவர்கள் விளக்கமளிக்க வேண்டும். இதனை சபாநாயகரே முடிவு செய்வார், நீதிமன்றம் அல்ல என்றும் கூறினார்.
முதல்வர் அசோக் கெலாட் அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அந்த கூட்டங்களில் பங்கேற்காததால், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர்கள் அனைவரையும் ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காங்கிரஸூக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இதனை அதிருப்தி எம்எல்ஏக்களுக்கான வெற்றியாக அமைந்துள்ளது, ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 200 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான 101 உறுப்பினர்களை விட கூடுதலாக ஒரு எம்எல்ஏவின் பலத்தை மட்டுமே அசோக் கெலாட் தரப்பு கொணநடுள்ளது. அதனால், சச்சின் பைலட் அணியை சேர்ந்தவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டால், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை குறையும் அதனால், கெலாட் தரப்பு எளிதில் வெற்றி பெறலாம்.
ஆனால், தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கில் அதிருப்தி எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றால், அவர்கள் தொடர்ந்து காங்கிரஸூக்கு எதிராக வாக்களிக்கலாம். அதனால், ராஜஸ்தானில் அசோக் கெலாட் அதிகாரத்தில் நீடிப்பது கடினமாகும்.
இதனிடையே, பாஜக தனது ஆட்சியை கலைக்க முயல்வதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார். அதில், உள்துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் மற்றும் சொந்த கட்சியை சேர்ந்தவர்களின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.