Read in English
This Article is From Jul 15, 2020

காங்கிரஸுக்குள் மீண்டும் சச்சின் பைலட்… அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்… பரபர தகவல்கள்!

Rajasthan Crisis: சச்சின் பைலட், காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதாலும் ‘கலகப் பிரச்னை’ சுமூக முடிவுக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • சச்சின் பைலட்டின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது
  • பைலட்டின் துணை முதல்வர் பதவியையும் காங்கிரஸ் பறித்துள்ளது
  • வரும் வெள்ளிக்குள் பைலட், விளக்கம் அளிக்க வேண்டுமென காங்., உத்தரவு
New Delhi/ Jaipur:

சொந்தக் கட்சியின் ஆட்சிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியிருக்கும் சச்சின் பைலட், மீண்டும் காங்கிரஸிலேயே நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிகிறது. 42 வயதாகும் பைலட், மீண்டும் கட்சியின் அங்கமாக மாற்றப்பட்டாலும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் NDTV-யிடம் தெரிவித்துள்ளார். 

“சச்சின் பைலட் மீண்டும் ராஜஸ்தானுக்குச் செல்வது என்பது கடினமானதாக இருக்கும். அவருக்கு ஒரு முக்கியமான தேசிய அளவிலான பதவி கொடுக்கப்படலாம். உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருக்காது. ஒரு மாதத்திற்குப் பின்னர் அப்படி செய்யப்படலாம்,” என்று சூசகமாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், “எந்த வித நிபந்தனைகளும் இன்றி சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸுக்குள் வருவது முக்கியமானதாகும்,” என்றார். 

இப்படியான நேரத்தில்தான் இன்று காலை, “நான் பாஜகவில் இணையவில்லை. நான் காங்கிரஸ்காரன்தான்” என்று உறுதிபட தெரிவித்துள்ளார் பைலட். அவர், தன் கலகத்தை ஆரம்பிக்கும் முன்னரும் இதே கருத்தைத்தான் தெரிவித்தார். அதே நேரத்தில் சில நாட்களுக்கு முன்னர், ‘எனக்கு ஆதரவாக ராஜஸ்தானில் 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த பலத்தை வைத்து என்னால் சுலபமாக ஆட்சியைக் கவிழ்த்த விட முடியும்' என சவால்விட்டார். 

Advertisement

அவர் இப்படி வெளிப்படையாக போர்க் கொடி தூக்கியும், காங்கிரஸ் தரப்பு சற்று பின்வாங்கியபடியே செயல்பட்டது. தொடர்ந்து அவரைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. பைலட் தரப்பில் இருக்கும் முக்கிய கோரிக்கை, ‘ராஜஸ்தான் முதல்வர் பதவி'. ஆனால், காங்கிரஸ் அதைத் தவிர மற்ற அனைத்தையும் செய்துதர தயார் என்றது. அதே நேரத்தில் பைலட்டின் துடுக்குத்தனமான நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரின் கட்சிப் பதவி மற்றும் ராஜஸ்தான் அரசின் துணை முதல்வராக இருந்த பதவியை நீக்கியது காங்கிரஸ். கட்சி நடவடிக்கைக்கு எதிராக வரும் வெள்ளிக் கிழமைக்குள் பதிலளிக்குமாறும் காங்கிரஸ் கட்சி, பைலட்டுக்கு உத்தரவிட்டுள்ளது. 

மிக முக்கியமாக, தன்னிடம் நிறைய சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று பைலட் தெரிவித்திருந்தார். அப்படி இருந்தும், முதல்வர் அசோக் கெலோட்டுக்கு ஆதரவாக மொத்தமுள்ள 200 ராஜஸ்தான் எம்எல்ஏக்களில் 106 பேரின் ஆதரவை அவர் பெற்றுள்ளார். இதனால், அவரின் ஆட்சிக்கு எத்தவித ஆபத்தும் இருப்பதாக தெரியவில்லை. இதனால்தான் சச்சின் பைலட்டும், முன்னர் தெரிவிதத்து போல கறாரான கருத்துகள் தெரிவிக்காமல், பொறுமையாக காய் நகர்த்தி வருகிறார். காங்கிரஸும், சச்சின் பைலட்டை மீண்டும் கட்சியின் அங்கமாக ஆக்கிக்கொள்ள விரும்பினாலும், அவரின் அனைத்து கோரிக்கைகளுக்கும் செவி சாய்க்கும் இடத்தில் இல்லை. 

Advertisement

சச்சின் பைலட், காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதாலும் ‘கலகப் பிரச்னை' சுமூக முடிவுக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 


 

Advertisement