This Article is From Aug 11, 2020

“எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்!”- செல்லூர் ராஜூ செய்த ‘கலகம்’; பொங்கிய ராஜேந்திர பாலாஜி

செல்லூர் ராஜூவின் கருத்து பற்றி, “என் நிலைப்பாடு என்னவென்பதை நான் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டேன்” என முடித்துக் கொண்டார் ராஜேந்திர பாலாஜி. 

“எடப்பாடியார்தான் என்றும் முதல்வர்!”- செல்லூர் ராஜூ செய்த ‘கலகம்’; பொங்கிய ராஜேந்திர பாலாஜி

"சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, யார் முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறாரோ அவர்தான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்"

ஹைலைட்ஸ்

  • செல்லூர் ராஜூ, முதல்வர் வேட்பாளர் பற்றி சூசக கருத்து கூறியிருந்தார்
  • ராஜேந்திர பாலாஜி அதை எதிர்க்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்
  • அதிமுக முகாமில் செல்லூர் ராஜூவின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ட்வீட் போட்டுள்ளார். முன்னதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று சூசகமான கருத்தைக் கூறியிருந்தார். தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 

செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது ராஜேந்திர பாலாஜி, “எடப்பாடியார் என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு, களத்தை சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம். களம் கான்போம். வெற்றி கொள்வோம். 2021-ம் நமதே!” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார். 

நேற்று செல்லூர் ராஜூ, “புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது, தானே முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவில்லை. மக்கள் சொன்னார்கள்.

அதேபோலத்தான் புரட்சித் தலைவி ஜெயலலிதாதான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினார்கள். இதுதான் அதிமுகவின் வரலாறு.

சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, யார் முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறாரோ அவர்தான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்” என்று சூசகமான பதிலை தெரிவித்துள்ளார். 

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியே, முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செல்லூர் ராஜூவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தன் ட்வீட் பற்றி மேலும் பேசியுள்ள ராஜேந்திர பாலாஜி, “கொரோனா பெருந்தொற்று காலத்தில், மக்களுக்காக அலைந்து தொடர்ந்து பணி செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடியார். இப்படி மக்களுக்காக உழைக்கும் ஒருவரை முன்னிருத்தி 2021 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்து வெற்றி கொள்ள வேண்டும்” என்றார்.

செல்லூர் ராஜூவின் கருத்து பற்றி, “என் நிலைப்பாடு என்னவென்பதை நான் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டேன்” என முடித்துக் கொண்டார் ராஜேந்திர பாலாஜி. 

.