This Article is From Jan 24, 2020

'பேசாமல் இருந்தால் ரஜினிக்கு நல்லது' - பெரியார் சர்ச்சை குறித்து துரை முருகன் கருத்து!!

பெரியார் குறித்து ரஜினி பேசிய கருத்தும், அதுபற்றி தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்ததும் தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பெரியார் அமைப்புகளின் போராட்ட அறிவிப்பால், ரஜினியின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

'பேசாமல் இருந்தால் ரஜினிக்கு நல்லது' - பெரியார் சர்ச்சை குறித்து துரை முருகன் கருத்து!!

ரஜினியின் சர்ச்சை கருத்து தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

பேசாமல் இருந்தால் ரஜினிக்கு நல்லது என்று பெரியார் சர்ச்சை விவகாரம் தொடர்பாக திமுக பொருளாளர் துரை முருகன் கருத்துக் கூறியுள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது பொதுக் கணக்குக் குழு தலைவராக சட்டமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான துரை முருகன் உள்ளார். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது-

பெரியாரைப் பற்றி ஸ்டாலின் கூறியவாறு, ரஜினிக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது. ஸ்டாலின் சொன்னதைப் போல ரஜினி பேசாமல் இருந்தால் அவருக்கு நல்லது. தந்தை பெரியார் மறைந்து பல ஆண்டுகள் ஆனபோதிலும் இன்றும் அவர் விவாதப் பொருளாக நிலைத்து நிற்கிறார். 

இவ்வாறு துரை முருகன் பேட்டி அளித்தார். 

துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி, “1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதா ஆகியோரின் நிர்வாணச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை. 

ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது. அப்போது ஆட்சியிலிருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இந்த செயலால் அரண்டுபோனது. துக்ளக் இதழின் பிரதிகளை மாநில அரசு பறிமுதல் செய்தது. அப்படி இருந்தும் மீண்டும் இதழ்களை அச்சடித்து விநியோகம் செய்தார் சோ. அது மிக அதிகமாக விற்றது,” என்று சர்ச்சையாக பேசினார். 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த பெரியார் அமைப்புகள், இந்த பேச்சிற்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவரது இல்லம் முற்றுகையிடப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்து ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
 

.