நல்ல மனிதர், மனதில் பட்டதை கள்ளம் கபடம் இல்லாமல் பேசுபவர் ரஜினிகாந்த் - ராஜேந்திர பாலாஜி
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்திற்கு எதிராக பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜன.14-ஆம் தேதி துக்ளக் இதழின் 50-ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இதில் 1971-இல் சேலத்தில் நடந்த நிகழ்வு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் ரஜினிகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், ரஜினிகாந்த் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், தனது கருத்து சரிதான் என்றும் தான் எதையும் கற்பனையாக பேசவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தான் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்தார். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது, "ரஜினி சேலத்தில் பேரணியில் என்ன நடந்ததோ அதைத் தான் கூறினார். தி.க.வினர் ரஜினியை மிரட்டிப் பார்க்கிறார்கள். கொடும்பாவியை எரிப்போம், வீட்டை முற்றுகையிடுவோம் என்பது மிரட்டல் தானே. பிராமண சமுதாயத்தை மட்டும் இழிவுபடுத்தும் செயலை தி.க.வினர் செய்துவருகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் தாக்கி பிழைப்பு நடத்துகின்றனர்.
ஆன்மீகவாதிகளை பழிதீர்க்கும் செயலை திகவினர் செய்து கொண்டிருக்கின்றனர். ரஜினிகாந்த் நியாயவாதி, நல்ல மனிதர், மனதில் பட்டதை கள்ளம் கபடம் இல்லாமல் பேசுபவர் ரஜினிகாந்த். சேலம் பேரணியில் ராமபிரான் படத்தை நிர்வாணமாகக் கொண்டு வந்தது உண்மையா இல்லையா? இதே வேறு மதத்தைச் சேர்ந்த கடவுளை இப்படிச் செய்திருந்தால் சும்மா விடுவார்களா? பயங்கரவாதம் வெடித்திருக்காதா? இந்து மதத்தை இழிவு படுத்துபவர்கள் தேர்தலில் அதன் விளைவுகளை அனுபவிப்பார்கள்.
ரஜினிகாந்த் பேசியதை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். அதனால், ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை, தமிழச்சியை திருமணம் செய்த ஒரு மனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது என்று அவர் கூறினார்.