Rajinikanth: 2019-லாவது ரஜினி, கட்சி குறித்து அறிவிப்பாரா..?
2017 ஆம் ஆண்டின் கடைசி நாளன்று, சென்னையில் ரசிகர்கள் மத்தியில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி (Rajinikanth), ‘நாட்டில சிஸ்டம் சரியில்ல. அதை சரி பண்ணியே ஆகணும். போருக்கு ரெடியா… வர்ற சட்டமன்றத் தேர்தல்ல 234 தொகுதியிலும் போட்டி போடுவோம்' என்று போர் முழக்கமிட, ராகவேந்திரா மண்டபத்திலிருந்தவர்கள் ஆர்ப்பரித்தனர். 2018 ஆம் ஆண்டு ஆரம்பித்ததே ரஜினியின் அரசியல் என்ட்ரியின் செய்தியோடுதான்.
இதையடுத்து, அன்புமணி முதல் சீமான் வரை வரிசைக்கட்டி ரஜினியை (Rajinikanth) வார ஆரம்பித்தனர். ஒரு எல்லையில், ‘தமிழர்களால் பணம் சேர்த்துவிட்டு, தமிழர்களுக்கு எதிராக கட்சி நடத்துபவர்களோடு உறவாடுகிறார் ரஜினி. அவர் தமிழனே அல்ல' என்றும், மறு முனையில் ‘கூத்தாடிகள் தமிழக அரசியலைக் கெடுத்தது போதும். ரஜினி வீட்டிலேயே ஓய்வெடுக்கட்டும்' என்று தூற்றப்பட்டார். அனைத்துக்கும் ரஜினியிடமிருந்து வந்த ஒரே பதில்… மௌனம்.
2018, ஜனவரி 1 ஆம் தேதியே அடுத்த அதிரடியை அவிழ்த்து விட்டார் ரஜினி. தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர், ‘ரஜினி மக்கள் மன்றம்' (Rajini Makkal Mandram) ஆரம்பித்துள்ளது குறித்து தெரியப்படுத்தினார். பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத தனது ரசிகர் மன்றங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதே, இந்த மக்கள் மன்றத்தின் மெயின் டாஸ்க்.
அனைத்துத் தரப்பினரையும் ஒன்றாக சேர்த்த பின்னர், மாவட்டச் செயலாளர்கள் முதல் அடிமட்ட பொறுப்பாளர்கள் வரை படிப்படியாக நியமனம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு பொறுப்பில் உள்ளவர்களுக்கும் மன்றத்தில் எத்தனை பேரை சேர்ப்பது என இலக்கு கொடுக்கப்பட்டது. 2018-ன் பெரும் பகுதியில் இந்த வேலைகள் படு ஜோராக நடந்து வந்தன. இப்படிப்பட்ட சூழலில்தான் 600 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்ட ரஜினியின் ‘2.0' ரிலீஸானது.
எதிர்பார்த்தப்படியே, இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் மெகா ஹிட் அடித்தது ‘2.0'. எப்படியும் அடுத்தது கட்சி அறிவிப்புதான் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வழக்கம்போல எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் 2018-யும் போக்கிவிட்டார் ரஜினி.
இப்படிப்பட்ட சூழலில் ரஜினியின் அடுத்தக்கட்ட அரசியல் மூவ்தான் என்ன என்று மக்கள் மன்ற நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம், “நாடாளுமன்றத் தேர்தலில் (Lok Sabha Election 2019) போட்டியில்லை என்பதில் தலைவர் உறுதியாக உள்ளார். அதனால்தான் நிதானமாக கட்சி கட்டமைப்பைப் பார்த்து வருகிறார்” என்று மட்டும் தகவல் சொன்னார்.
ஆனால், கமல் கட்சி (Makkal Needhi Maiam) ஆரம்பித்து தேர்தல் போட்டிவரை புயல் வேகத்தில் பயணிக்கும் நிலையில், ரஜினி தொடர்ந்து பின்தங்கியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் தர்ம சங்கடத்தை உருவாக்கி வருகிறது. கொள்கை பற்றி கேட்டால், ‘தலையே சுத்திடுச்சு' என்பதும், பாஜக குறித்து கேட்டால், '10 பேர் சேர்ந்து ஒருத்தர எதிர்த்தா அதில யார் பலசாலி' என்று முட்டுக் கொடுப்பதும் மக்கள் மத்தியில் செல்வாக்கைக் குறைக்கவே செய்கிறது. என்ன ஆனாலும், படத்துக்குப் படம் கூட்டம் கூடுவதால் வெள்ளித் திரையில் ரஜினிக்கான மவுசு குறையவில்லை என்பது ஊர்ஜிதமாகிறது. அதே நேரத்தில், அரசியல் களத்தில் சினிமா மவுசை மட்டும் வைத்து நேரடியாக முதல்வராகிவிட முடியுமா என்ன?