This Article is From Jan 20, 2020

'பெரியார் குறித்த அவதூறு கருத்துக்கு ரஜினி உரிய விலையைக் கொடுப்பார்' : கி.வீரமணி

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின்போது ரஜினி தெரிவித்த கருத்து, அவர் யார் என்பதை புரிந்துகொள்ள உதவும். 7 பேரின் நிலை என்ன என்று கேட்டபோது, எந்த 7 பேர் என்று கேட்ட சிறந்த அரசியல் ஞானி என்று வீரமணி கூறியுள்ளார்.

'பெரியார் குறித்த அவதூறு கருத்துக்கு ரஜினி உரிய விலையைக் கொடுப்பார்' : கி.வீரமணி

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பெரியார் குறித்து ரஜினி தெரிவித்த கருத்து தொடர்பாக விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

பெரியார் குறித்த அவதூறு கருத்துக்கு ரஜினி உரிய விலையைக் கொடுப்பார் என்று, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். 

பெரியார் குறித்து ரஜினி தெரிவித்த கருத்து தொடர்பாக திராவிடர் கழக தலைவர் வீரமணி தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது - 

பெரியார் குறித்து கருத்து தெரிவித்ததற்கான விலையை ரஜினி கொடுப்பார். ஏற்கனவே அவருக்கு என்ன மரியாதை இருந்தது என்பது வெளியே தெரிந்து விட்டது. அதனால் தவறான தகவல் கொடுக்கும்போது ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மற்றவர்கள் சுட்டி காட்டுகின்றனர். சுட்டிக் காட்டும்போது திருத்திக் கொள்ள வேண்டும். அவர் அரசியலுக்கு வந்தால் அவரது பேச்சு எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். 

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின்போது ரஜினி தெரிவித்த கருத்து, அவர் யார் என்பதை புரிந்துகொள்ள உதவும். 7 பேரின் நிலை என்ன என்று கேட்டபோது, எந்த 7 பேர் என்று கேட்ட சிறந்த அரசியல் ஞானி. 

இவ்வாறு வீரமணி கூறினார். சென்னை, கலைவாணர் அரங்கில், சமீபத்தில் நடந்த, துக்ளக் 50வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்றார். 

அத்துடன், பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் செருப்பு மாலை போடப்பட்டது என்றும் அப்போது ரஜினி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெரியார் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர். தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில், ரஜினிகாந்த் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. .

இந்நிலையில், பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்காவிட்டால் வருகிற 23ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்துக்கூறிய பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா, திராவிடர் கழகம் ரஜினியை மிரட்டப்பார்ப்பதாகவும், அவர் சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டார் என்று ம் கூறியுள்ளார். 

இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பெரியார் குறித்து ரஜினி தெரிவித்த கருத்து தொடர்பாக விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். 
 

.