Rajini Periyar Row: '40 ஆண்டு காலமாக திரைத் துறையில் இருக்கும் முன்னணி நடிகர் ஒருவர் இப்படி பேசியது கண்டனத்திற்குரியது'
Rajini Periyar Row: ‘துக்ளக்' இதழின் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். அவர் பேசியதற்கு திராவிட இயக்கத்தினர் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். “ரஜினி பேசியதில் எந்த உண்மையும் ஆதாரமும் இல்லை,” என்று அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்தபோதும், “நான் கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ரஜினி.
முன்னதாக துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி, “1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதா ஆகியோரின் நிர்வாணச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை. ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது,” என்று சர்ச்சையாக பேசினார்.
துக்ளக் விழாவில் ரஜினி பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து அது குறித்து விளக்கம் கொடுத்த அவர், “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
ரஜினியின் இந்த கருத்துகளுக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பாஜக தலைவர்கள், ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “தமிழ்நாட்டின் நலனிற்காக, தமிழக மக்களின் நலனிற்காக 95 ஆண்டு காலம் உழைத்த மாபெரும் தலைவர் பெரியார். அவரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிராக இருப்பவர்கள் கூட அவர் வைக்கும் பிற கருத்துகளை ஆமோதிப்பவர்களாகவே இருக்கிறார்கள். எந்தவித எதிர்பார்ப்புமின்றி மக்கள் தொண்டாற்றிய பெரியார், ஒரு தனி மனிதர் அல்ல. அவர் ஒரு மாபெரும் இயக்கம். இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் அவருடைய தேவை இருக்கும்.
பெரியார் போன்ற மாபெரும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போது, அவரைப் பற்றித் தெரிந்த நபர்களிடம் கேட்டுவிட்டு ரஜினி பேசியிருக்க வேண்டும். அவருடனேயே ஆலோசகர் போல பயணித்துக் கொண்டிருக்கும் தமிழருவிமணியனிடம் பெரியாரைப் பற்றி கேட்டு அறிந்து பேசியிருக்கலாமே. 40 ஆண்டு காலமாக திரைத் துறையில் இருக்கும் முன்னணி நடிகர் ஒருவர் இப்படி பேசியது கண்டனத்திற்குரியது,” என்றார் தீர்க்கமாக.