Rajini Periyar Row: "மக்களின் பிரச்னைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல்..."
Rajini Periyar Row: சென்ற வாரம் நடந்த ‘துக்ளக்' இதழின் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். அவர் பேசியதற்கு பல தரப்பினர் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். “ரஜினி பேசியதில் எந்த உண்மையும் ஆதாரமும் இல்லை,” என்று அவர்கள் தொடர்ந்து சொல்லி வன்றனர். ரஜினிக்கு எதிரான போராட்டங்கள் வீரியமடைந்த போதும், “நான் கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சூழல் இப்படி இருக்க, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், திருமுருகன் காந்தி, ரஜினியின் கருத்துகளுக்காக அவரை “முட்டாள்” என்று சாடினார். தற்போது ஏன் அப்படியொரு காட்டமான விமர்சனத்தை வைத்தேன் என்பது குறித்து திருமுருகன் கூறியுள்ளார்.
முன்னதாக துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி, “1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதா ஆகியோரின் நிர்வாணச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை. ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது,” என்று சர்ச்சையாக பேசினார்.
துக்ளக் விழாவில் ரஜினி பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து அது குறித்து விளக்கம் கொடுத்த அவர், “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இந்த மொத்த விவகாரம் பற்றி திருமுருகன், “நாடு முழுவதும் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்களுக்கு அவர்கள் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியுள்ளது. பெண்கள் அதிகமாக வீதிக்கு வந்து போராடத் துவங்கியுள்ளார்கள். இப்படிப்பட்ட சூழலில், இது எதையும் பற்றி கவலை கொள்ளாமல், 1971-ல் நடக்காத ஒன்றைப் பற்றி பேசி ஏன் சர்ச்சையை கிளப்ப வேண்டும். குறைந்தபட்சம் தான் பேசுவது என்ன என்பது குறித்து தெரிந்து அறிந்தாவது பேசியிருக்க வேண்டாமா. மக்களின் பிரச்னைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாக பேசுபவரை முட்டாள் என்று அழைக்காமல் எப்படி அழைப்பது,” என கொதித்துள்ளார்.