நடிகர் ரஜினிகாந்த், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் #MeToo பரப்புரை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அந்த கேள்விக்கு ரஜினிகாந்த், ‘#MeToo பரப்புரை பெண்களுக்கு அதிக தைரியத்தைக் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் அதை அவர்கள் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது' என்று பேசினார்.
தொடர்ந்து அவரிடம் வைரமுத்து மீது #MeToo புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, ‘வைரமுத்து மீது புகார் தெரிவிக்கப்பட்டது குறித்து அறிவேன். ஆனால், அதற்கு வைரமுத்துவே பதில் அளித்துள்ளாரே. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்று சொல்லி இருக்கிறாரே. மேலும், புகார் தெரிவித்தவர் மீதும் சட்டபடி நடவடிக்கை எடுப்பேன் என்றுள்ளாரே' என்று கூறினார்.
இந்திய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் #MeToo விவகாரத்தில், வைரமுத்து மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரபல பாடகி சின்மயி, வைரமுத்து மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அந்த விவகாரம் தமிழ் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
சின்மயி கூறிய குற்றச்சாட்டுகளை வைரமுத்து முழுவதுமாக மறுத்துள்ளார். சின்மயி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சட்ட ரீதியாக பதிலடி கொடுப்பேன் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.