ஹைலைட்ஸ்
- ரஜினிகாந்த் யாரிடமும் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் இல்லை: திருநாவுக்கரசர்
- அவருக்கு எல்லா அனுபவமும் இருக்கிறது
- நான் எந்த ஆலோசனையும் அவருக்கு சொல்லவில்லை
ரஜினிகாந்த் யாரிடமும் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் இல்லை எனக் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அதில், கட்சி தொடங்குவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், புதிய கட்சியை எப்போது அறிவிப்பது, அதற்கான மாநாட்டை எங்கே நடத்துவது உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், அப்போது நிறையக் கேள்விகள் எழுந்தது. அதற்குப் பதில் கொடுத்தேன். நிறைய விஷயங்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம். அவர்களுக்கு எல்லாம் திருப்தி ஏற்பட்டது. ஒரு விஷயத்தில் மட்டும் எனக்குத் திருப்தி கிடைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏமாற்றம் கிடைத்தது. அது குறித்து இப்போது கூற விரும்பவில்லை. நேரம் வரும் போது தெரிவிக்கிறேன்.
முஸ்லிம் மத குருமார்களைச் சந்தித்தது இனிமையானதாக இருந்தது. சகோதரத்துவம், அன்பு, அமைதி, ஆகியவை நிலவ உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கூறினார்கள். நானும் இருப்பேன் எனத் தெரிவித்தேன். சிஏஏ, என்பிஆர் குறித்து முஸ்லிம் மத குருமார்கள் ஆலோசனை செய்து பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தேன். அதற்கு என்னால் முடிந்த அளவு உதவுவதாகத் தெரிவித்துள்ளேன்.
தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நானும் கமலும் நிரப்புவது குறித்து காலம் தான் பதில் சொல்லும் என்று அவர் கூறினார்.
இதனிடையே, காங்கிரஸ் எம்.பி.யான திருநாவுக்கரசர் இன்று காலை ரஜினிகாந்த் சந்தித்தார். நடப்பு அரசியல், 2021 சட்டமன்றத் தேர்தல் எப்படி இருக்கும், கூட்டணிகள் எப்படி அமையும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாகத் தெரிகிறது.
ரஜினியைச் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர் கூறியதாவது, இன்று எனது பேரன் சேஷசாயிக்கு முதல் பிறந்தநாள். ரஜினிகாந்த்திடம் வாழ்த்து பெற மகன், மருமகள், பேரன் ஆகியோருடன் வந்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
ரஜினிகாந்த் யாரிடத்திலும் ஆலோசனை பெற வேண்டிய அவசியத்தில் இருப்பதாக நான் கருதவில்லை.அவருடைய சினிமா அனுபவம், அரசியல் அனுபவம், புதுவாழ்க்கை அனுபவம் எல்லாம் அவருக்கு இருக்கிறது. நான் ஆலோசனை சொல்லியாகவேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு கிடையாது. எனவே நான் எந்த ஆலோசனையும் அவருக்குச் சொல்லவில்லை.'
ஆன்மீக அரசியல் குறித்து நீங்கள் ரஜினிகாந்த்திடம் தான் கேட்க வேண்டும். நீங்கள் எந்த ஏமாற்றமும் அடைந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் உங்களை நான் சந்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.