Read in English தமிழில் படிக்க
This Article is From Nov 20, 2019

அரசியலிலும் இணைந்து பயணிக்க தயாராகும் ரஜினி, கமல் பிளாக்பஸ்டர் கூட்டணி!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்த ரஜினியின் கருத்து அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தின் மேம்பாட்டிற்காக இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டியது வந்தால் பயணிப்போம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Edited by
Chennai:

தமிழகத்தின் மாபெரும் திரை நட்சத்திரங்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலிலும் இணைந்து பயணிக்க தயார் என ஒரே சமயத்தில் அதிரடியாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இது தமிழகத்தில் வரவுள்ள 2021 சட்டமன்ற தேர்தல் குறித்து பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.  

முன்னதாக, நேற்றைய தினம் ஒடிசா பல்கலைக்கழகத்தில், டாக்டர் பட்டம் பெற்று திரும்பிய நடிகர் கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நானும், ரஜினியும் இணைவதில், அதிசயம் எதுவும் இல்லை. 44 ஆண்டுகளாக இணைந்து தான் உள்ளோம். 

அரசியலில் இணையும் அவசியம் வந்தால், கண்டிப்பாக சொல்கிறோம். தற்போது வேலை தான் முக்கியம். இதை பேச வேண்டியதில்லை. தமிழகத்தின் மேம்பாட்டிற்காக, இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டியது வந்தால் பயணிப்போம் என்று அவர் கூறினார். 

Advertisement

இதையடுத்த ஒரு 1 மணி நேரத்தில் கோவா செல்வதற்காக, சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம், கமல்ஹாசன் கருத்து குறித்து கேள்வி எழுப்பிய போது, "மக்கள் நலனுக்காக, நானும், கமலும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நிச்சயமாக இணைவோம்,'' என்றார்.

முன்னதாக, நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 

Advertisement

தமிழக அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 சதவீதம் பேர் சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்து தடைகளை தாண்டி ஆட்சி நீடித்து வருகிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது; இன்று நடக்கிறது; நாளையும் நடக்கும் என்றார். 

நடிகர் ரஜினிகாந்தின் இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக அமைச்சர்கள் பலர் ரஜினிகாந்தின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.  

Advertisement

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், நிச்சயம் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்று கருத்து பரவலாக பேசப்பட்ட நிலையில், அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல எனக்கும் பூச முயற்சிக்கிறார்கள். ஆனால் நானும் சிக்கமாட்டேன், திருவள்ளுவரும் சிக்க மாட்டார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற தனது அரசியல் கட்சியை 2018ல் தொடங்கினார். இதையடுத்து, அக்கட்சி முதன்முதலாக மக்களவை தேர்தலை தனித்து சந்தித்தது, இதில் 2 சதவீத வாக்குகளை கைப்பற்றிய நிலையில் எந்த தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பெறவில்லை. இதையடுத்து, தற்போது மக்கள் நீதி மய்யம் வரவுள்ள 2021 சட்டமன்ற தேர்தலுக்காக தீவிரமாக பணியாற்றி வருகிறது. 

Advertisement

நடிகர் ரஜினிகாந்தோ, கடந்த 2017ல் நிச்சியமாக அரசியலுக்கு வருவேன் என அதிரடியாக அறிவித்ததோடு சரி, அதன்பின் தற்போது வரை கட்சியை தொடங்கியதாக தெரியவில்லை. 

Advertisement