Chennai: ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவர் தலைமையிலான அமைச்சர்கள் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்றிருக்க வேண்டும்’ என்று ரஜினியின் கருத்துக்கு, அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் ஒருங்கிணைத்த கருணாநிதிக்கான நினைவேந்தலில் பேசிய ரஜினி, ‘கருணாநிதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு இந்தியாவே மெரினா கடற்கரைக்கு வந்திருந்தது. முப்படையும் அவருக்கு மரியாதை செலுத்தின. 21 குண்டுகள் முழங்க அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் வந்து கருணாநிதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். அப்படியிருக்க, தமிழகத்தின் முதல் குடிமகனான முதல்வர் கலந்து கொண்டிருக்க வேண்டாமா? மொத்த அமைச்சரவையும் கலந்து கொண்டிருக்க வேண்டாமா? மக்கள் என்ன நினைப்பார்கள்? நீங்கள் என்ன எம்.ஜி.ஆரா ஜெயலலிதாவா? ஒருவேளை கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தால், நானே போராட்டத்தில் குதித்திருப்பேன். பல்லாயிரம் பேர் அவரால் அரசியலுக்கு வந்தனர். பல நூறு பேர் அவரால் தலைவர்கள் ஆகினர்’ என்று தெரிவித்தார்.
இதற்கு இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘ஒரு கட்சியின் தலைவருக்கு நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி அரசியல் குறித்து பேசியுள்ளார். அந்த இடத்தில் இப்படி பேசியதை வைத்துப் பார்க்கும் போது ரஜினிக்கு அரசியல் அனுபவம் போதாது என்பது தெரிகிறது. நேற்றைய நிகழ்ச்சியை தனக்கு சாதகமாக ரஜினி பயன்படுத்திக் கொண்டார். பகுதி நேர அரசியல்வாதியாக இருக்கும் ரஜினி முழு நேர அரசியல்வாதியாக மாறத் துடிக்கிறார் என்பது தெரிகிறது. ஒரு தேர்ந்த அரசியல்வாதிப் போலத்தான் நேற்று அவர் பேசியுள்ளார். கருணாநிதியின் மறைவை ஒட்டி, அவரின் தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்கவே அவர் அதிமுக அரசை விமர்சனம் செய்து பேசியுள்ளார். தமிழக அரசின் சார்பாகத்தான் நான் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன்’ என்று பதில் கருத்து தெரிவித்துள்ளார்.