Rajinikanth Periyar Row: துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை முன்வைத்தார். ரஜினி சொன்னது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை, அவர் வரலாற்றைத் திரித்துச் சொல்கிறார் என்றும், பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரஜினி. அவரின் கருத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் எதிர்வினையாற்றியுள்ளது.
சென்னையில் இருக்கும், தனது போயஸ் தோட்டம் இலத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
ரஜினி, செய்தியாளர்களை சந்தித்தைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர், கொளத்தூர் மணி, “1971 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை ரஜினிகாந்த் காட்டியது ஏன்?,” என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். அவர் இப்படி கேள்வி எழுப்புவதற்குக் காரணம், துக்ளக் இதழில் இதைப் போன்ற ஒரு சம்பவம் நடந்ததாக செய்தியே வரவில்லை என்று திராவிட இயக்கத்தினர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். துக்ளக்கில் செய்தி வந்ததே இல்லை என்றால், ரஜினி பேசியது முழுதும் தவறான தகவல் என்று உறுதி செய்யப்படுத்தப்படும். அதன் காரணமாகவே திராவிட இயக்கத்தினர், ‘ரஜினி துக்ளக் ஆதாராத்தை வெளியிட வேண்டும்,' என்று வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி, “1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதா ஆகியோரின் நிர்வாணச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை.
ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது. அப்போது ஆட்சியிலிருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இந்த செயலால் அரண்டுபோனது. துக்ளக் இதழின் பிரதிகளை மாநில அரசு பறிமுதல் செய்தது. அப்படி இருந்தும் மீண்டும் இதழ்களை அச்சடித்து விநியோகம் செய்தார் சோ. அது மிக அதிகமாக விற்றது,” என்று சர்ச்சையாக பேசினார்.
இதனால் ரஜினிக்கு எதிராக திராவிட இயக்கங்கள் பொங்கி எழுந்துள்ளன. திராவிடர் கழகம், மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம், வெறுப்பைத் தூண்டும் வகையில் ரஜினி பேசியுள்ளதாகக் கூறி பல இடங்களில் காவல் துறையில் புகார் அளித்துள்ளன.
ரஜினி, தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், “தர்பார்” திரைப்படம் ஓடும் திரையரங்குகளுக்கு வெளியில் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளது திராவிடர் விடுதலைக் கழகம்.