This Article is From Feb 13, 2020

“ரஜினி - பாமக கூட்டணி!”- ராமதாஸை இப்படி கலாய்ச்சுப்புட்டாரே வேல் முருகன்!!

"அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அப்போது ரஜினியோடு கூட்டணி வைக்க வேண்டும். அல்லது..."

“ரஜினி - பாமக கூட்டணி!”- ராமதாஸை இப்படி கலாய்ச்சுப்புட்டாரே வேல் முருகன்!!

"கடந்த 30 ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சித்து வந்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ்"

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டிப் பல அரசியல் காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தைப் பலரும் உற்று நோக்குகிறார்கள். இரு திராவிடக் கட்சிகளைத் தவிர, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக, நாம் தமிழர் கட்சி என பல கட்சிகள் களத்தில் நிற்கின்றன. 

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, சமீப காலமாக சட்டசபைத் தேர்தலை தன்னிச்சையாக போட்டியிடுவது குறித்துப் பேசி வருகிறது. மேலும், ரஜினியுடன் கூட்டணி வைப்பது பற்றியும் அக்கட்சி பேசிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாக பேசியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன். 

அவர், “பாபா திரைப்படம் வந்தபோது, ராமதாஸுக்கும் ரஜினிக்கும் பிரச்னை வெடித்தது. அந்தப் படத்தின் ஃபிலிம் பொட்டிகளை தியேட்டரில் இருந்து எடுத்துவந்து நான்தான் பண்ருட்டி காட்டில் காவல் காத்தேன். அப்போது ரஜினிகாந்த், “நானா, அந்த ராமதாஸா எனப் பார்த்து விடுகிறேன்” என்று கங்கனம் கட்டினார். தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில், தனது ரசிகர்கள் மூலம் ராமதாஸுக்கு எதிராக செயலாற்றியவர் ரஜினி.

அதேபோல கடந்த 30 ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சித்து வந்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். ஆனால், இன்று ரஜினியைப் பாராட்டி அறிக்கை விடும் அளவுக்கு வந்துள்ளார். அரசியல் லாபத்துக்காகவும், ஆதாயத்துக்காகவும் 30 ஆண்டுகளாக நிலைப்பாட்டை மாற்றி வரும் தலைவர் ராமதாஸ். ஆகையால், தற்போது ரஜினியோடு கூட்டணி வைப்பது பற்றி பேசி வருகிறார். 

தமிழக அரசின் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை ‘டயர் நக்கி' என்று விமர்சித்த கட்சி பாமக. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்-ஐத் தாக்கல் செய்ய வந்தபோது, ‘நிதிநிலை அறிக்கை என்றால் என்னவென்று தெரியுமா?' என்று சீறிய கட்சி பாமக. ஆனால், இன்று அவர்களோடுதான் கூட்டணியில் இருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அப்போது ரஜினியோடு கூட்டணி வைக்க வேண்டும். அல்லது, அதிமுக-வுடனான கூட்டணி பேரத்தை அதிகரிக்க வேண்டும். இதுதான் பாமகவின் திட்டம். இதை யாராலும் மறுக்க முடியாது,” என்று பேசினார். 

ரஜினி - பாமக கூட்டணி தற்போது தமிழகத்தின் ஹாட்-டாப்பிக்காக உருவெடுத்துள்ளது. 

.