ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.
ஹைலைட்ஸ்
- ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றமே என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
- 2021 தேர்தலுக்கு முன்னதாக கட்சியைத் தொடங்குவேன் என ரஜினி கூறியுள்ளார்.
- சிறுத்தை சிவா இயக்கும் ’அண்ணாத்த ’படப்பிடிப்பில் ரஜினி பிசியாக உள்ளார்.
Chennai: ஒரு விஷயத்தில் தனக்கு மிகுந்த ஏமாற்றமே உள்ளது என மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கட்சி தொடங்குவதாக அறிவித்து 2 வருடங்களுக்கு பின்னர் தற்போது முதன்முறையாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக சென்னை போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது, மாவட்ட செயலாளர்களுடன் நல்ல ஒரு சந்திப்பு நடைபெற்றது. அவர்களுக்கு மிக திருப்திகரமாக இருந்தது. "நாங்கள் பல பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். தனிப்பட்ட முறையில், ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு மிகுந்த ஏமாற்றமே உள்ளது. இது தொடர்பாக நேரம் வரும்போது கூறுகிறேன்” என்றார்.
எனினும், ரஜினிகாந்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறும்போது, இது மக்கள் மன்றத்தின் செயல்பாட்டு திறன் குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் என்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைவதாக ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்ததை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அவரது ரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட்டு, ரஜினி மக்கள் மன்றமாக பின்னர் உருவாக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியைத் தொடங்குவேன் என ரஜினிகாந்த் உறுதியாக தெரிவித்துள்ளார்.
அண்மையில், மதத் தலைவர்களே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைத் தூண்டுகிறார்கள் என்று ரஜினி கருத்து கூறியதை தொடர்ந்து, அவரை முஸ்லிம் மதகுருமார்கள் சந்தித்தனர்.
இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம், மதகுருமார்கள் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், அது ஒரு இனிமையான சந்திப்பு. நாட்டில் சகோதரத்துவம், அன்பு, அமைதி நிலவ வேண்டும் என்று கூறினார்கள். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். நானும் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகத் தெரிவித்தேன்.
சிஏஏ, என்பிஆர் விவகாரங்கள் குறித்து மதகுருமார்கள் (அரசியல்வாதிகள் அல்ல) தங்களுக்குள் கலந்து ஆலோசித்து பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுதான் சரியானதாக இருக்கும். அதற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என அவர்களிடம் தெரிவித்தேன் எனக் கூறினார்.
தொடர்ந்து, அவரிடம் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி விட்டுச்சென்ற வெற்றிடத்தை, நீங்களும், கமல்ஹாசனும் நிரப்ப முயற்சிக்கிறார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "காலம் தான் அதற்கு பதில் சொல்லும்" என்றார்.
ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு மற்றும் மீனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதேபோல், இந்த படத்திற்கு பின்னர் கமல்ஹாசன் தயாரிப்பில் படம் பன்னுவதற்கு ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
தொடர்ந்து, ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இணைந்து பயணிக்க விருப்பம் தெரிவித்துள்ளதோடு, உயர்மட்ட தலைவர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பவும் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.