Rajinikanth Press Meet: 'இந்த ஆலோசனைகளில் வந்த கருத்துகள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தின'
ஹைலைட்ஸ்
- சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி
- தனது எதிர்கால அரசியல் திட்டம் குறித்துப் பேசினார் ரஜினி
- நான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படமாட்டேன்: ரஜினி
Rajinikanth Press Meet: நடிகர் ரஜினிகாந்த், இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களைச் சந்தித்து, தனது அரசியல் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
முதலில் அரசியலுக்கான தனது மூன்று திட்டங்களை அறிவித்தார் ரஜினி. அதன்படி, முதலாவதாக, தேவையான அளவுக்கு மட்டுமே கட்சி நிர்வாகிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றார். இரண்டாவதாக, இளைஞர்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார். மூன்றாவதாக, கட்சிக்குத் தனி தலைமை, ஆட்சிக்குத் தனி தலைமை என்றார்.
சில நாட்களுக்கு முன்னர் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்துப் பேசினார் ரஜினிகாந்த். கட்சி தொடங்குவது பற்றியும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர்கள் உடனான சந்திப்பு முடிந்ததைத் தொடர்ந்து ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அனைத்தும் நன்றாக நடந்தது. ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு அதிருப்தி இருக்கிறது. அது குறித்து நேரம் வரும்போது சொல்கிறேன்,” என முடித்தார்.
அன்று எந்த விஷயத்தில் அதிருப்தி ஏற்பட்டது என்பது குறித்து இன்று தெளிவுபடுத்திய ரஜினி, “எனது மூன்றாவது மிகவும் முக்கியமான திட்டம், கட்சிக்கும் ஆட்சிக்கும் தனித் தனி தலைமை. இந்தத் திட்டத்தை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று எண்ணினேன். இது குறித்து நான் பலரிடம் பேசினேன். பலரிடம் கருத்துக் கேட்டேன்.
பலர் கட்சிப் பதவி இல்லை என்றால் யார் வருவார்கள் என்று கேட்டார்கள். 50 வயதுக்குக் கீழானவர்களுக்குத்தான் பதவி என்றால் மன்றத்தில் பலருக்குப் பிடிக்காது என்றார்கள். மூன்றாவது திட்டத்தை சில இளைஞர்களைத் தவிர யாரும் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த ஆலோசனைகளில் வந்த கருத்துகள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தின. இதை மாவட்டச் செயலாளர் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் எனது அன்றைய வருத்தம். தலைவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதுதான் நல்ல தொண்டர்களின் அடையாளம். தொண்டர்கள் சொல்வதைத் தலைமை ஏற்காது,” என்று கூறினார்.