நதிகள் இணைக்கப்பட்டால் வறுமை ஒழிந்துவிடும்- ரஜினி
இன்னும் ஒரு சில நாட்களில் மக்களவைத் தேர்தல் ஆரம்பிக்க உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த், பாஜக-வின் தேர்தல் அறிக்கைக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். மோடி தலைமையிலான பாஜக, நேற்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில் இன்று சென்னை, போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ‘பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதை நான் வரவேற்கிறேன். நதிகள் இணைக்கப்பட்டால் வறுமை ஒழிந்துவிடும். விவசாயிகள் பெருமளவு பயனடைவார்கள்' என்று கருத்து கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், ‘வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் உங்களின் நிலைப்பாடு என்ன. கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு கொடுப்பீர்களா?' என்று கேட்கப்பட்டது.
அதற்கு ரஜினிகாந்த், ‘எனக்கும் கமலுக்கும் இடையில் இருக்கும் நல்ல நட்புறவைக் கெடுத்துவிடாதீர்கள். நான் முன்னரே சொன்னது போல, என்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை' என்று பதிலளித்தார்.
உடனே ஒரு பத்திரிகையாளர், ‘சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து…' என்று முடிப்பதற்குள், நடையைக் கட்டினார் ரஜினி.