This Article is From Mar 13, 2020

பரபரப்பைக் கிளப்பிய பிரஸ் மீட்… திமுக, அதிமுகவை வெளுத்துவாங்கிய ரஜினி- என்னதான் சொன்னார்..?

Rajini Press Meet: "நாம் எதிர்ப்பது இரண்டு பெரிய ஜாம்பவான்களை… "

பரபரப்பைக் கிளப்பிய பிரஸ் மீட்… திமுக, அதிமுகவை வெளுத்துவாங்கிய ரஜினி- என்னதான் சொன்னார்..?

Rajini Press Meet: "10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத ஒரு கட்சி. பெரிய ஆளுமை இல்லாத ஒரு நிலை"

ஹைலைட்ஸ்

  • சென்னையின் லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி
  • அரசியலுக்கான தனது 3 கட்ட திட்டத்தை அறிவித்தார் ரஜினி
  • செய்தியாளர்களிடம் கேள்விகளை எதிர்கொள்ளவில்லை ரஜினி

Rajini Press Meet: நடிகர் ரஜினிகாந்த், இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களைச் சந்தித்து, தனது அரசியல் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

முதலில் அரசியலுக்கான தனது மூன்று திட்டங்களை அறிவித்தார் ரஜினி. அதன்படி, முதலாவதாக, தேவையான அளவுக்கு மட்டுமே கட்சி நிர்வாகிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றார். இரண்டாவதாக, இளைஞர்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார். மூன்றாவதாக, கட்சிக்குத் தனி தலைமை, ஆட்சிக்குத் தனி தலைமை என்றார். 

தொடர்ந்து மாநிலத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக பற்றிப் பேசிய ரஜினி, “இப்போது நீங்கள் நினைக்கலாம். இதை ஏன் இப்போது சொல்கிறார்கள் என்று நினைக்கலாம். கட்சித் தொடங்கும்போது சொல்லலாமே என்று நினைக்கலாம். மனதிலிருந்து வரும் திட்டம் இது. உண்மைக்கான திட்டம் இது.

நாம் எதிர்ப்பது இரண்டு பெரிய ஜாம்பவான்களை… 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத ஒரு கட்சி. பெரிய ஆளுமை இல்லாத ஒரு நிலை. பண பலம், ஆள் பலம். அவர்களை எதிர்க்க வேண்டும்.

இன்னொரு பக்கம், ஆட்சியைக் கையில் வைத்திருக்கிறார்கள். குபேரனுடைய சொத்து கையில் உள்ளது.

இந்நிலையில், என்னை நம்பி வருபவர்களை என்னால் ஏமாற்ற முடியாது. முன்னரே அரசியலுக்கு வருவது பற்றி அறிவிப்பு வெளியிட்டுவிட்டேன். இப்போது நான் அரசியலிலிருந்து விலகிவிட்டால்… என்னைக் கோழை என்று சொல்வார்கள். பயந்துவிட்டார்கள் என்று சொல்வார்கள். அதனால்தான் இதை முதலில் மக்களிடம் சொல்ல நினைத்தேன். 

இரு பெரிய கட்சிகளிலும் இரு பெரிய ஆளுமைகள் இல்லை. திமுகவில் 30 சதவீத ஓட்டுதான் கட்சிக்காக. 70 சதவீத ஓட்டுக் கலைஞருக்காக விழுந்தது. அதிமுகவில், 30 சதவீத ஓட்டுதான் கட்சிக்காக. 70 சதவீத ஓட்டு ஜெயலலிதாவுக்காக விழுந்தது. இப்போது அவர்கள் இல்லை. இதுதான் நேரம். மக்கள் மனதில் மாற்றம் வரக்கூடிய நேரம்.

தமிழகம், புரட்சி பூமி. இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் தேசியக் கட்சி ஆட்சியிலிருந்தபோது, இங்குதான் மாநிலக் கட்சி ஆட்சிக்கு வந்தது. 1960களில் நடந்த புரட்சி இப்போது மீண்டும் நடக்க வேண்டும். இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 2021 ஆம் ஆண்டைவிட்டால் மீண்டும் நமக்கு வாய்ப்பு கிடைக்காது. எனக்கு இப்போது 71 வயது. பல இன்னல்களிலிருந்து பிழைத்து வந்துள்ளேன். 

அரசியல் மாற்றம். ஆட்சி மாற்றம். இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை. வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு. ஜெய்ஹிந்த்,” என்று தனது உரையை முடித்தார். 

.