"பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில்..."
ஹைலைட்ஸ்
- இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஜினி, செய்தியாளர்களை சந்தித்தார்
- அப்போது தனது அரசியல் எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசினார்
- அதன்படி, 3 அம்ச திட்டத்தை அறிவித்தார் ரஜினி
இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வந்தால் செயல்படுத்தப் போகும் 3 திட்டங்கள் குறித்துப் பேசினார்.
ரஜினி, “முதலாவது திட்டம், தேவையில்லாத கட்சிப் பதவிகளை வைத்துக் கொள்ளாமல் இருப்பது. தேர்தலுக்கு மட்டும் பதவிகளை உருவாக்கி, ஆட்சிக்கு வந்தால் அந்தப் பதவிகள் நீக்குவது. பதவிகளில் அதிகம் பேர் நியமிக்கப்பட்டால் அது ஊழலுக்கு வழி வகுக்கிறது.
இரண்டாவது திட்டம், 50 வயதுக்குக் கீழே இருக்கும் இளைஞர்களுக்கும் பெரும்பான்மையான வாய்ப்புகளைக் கொடுப்பது.
மூன்றாவது திட்டம், கட்சிக்கு ஒரு தலைமை. ஆட்சிக்கு ஒரு தலைமை,” என்று திட்டங்களை அறிவித்தார். ரஜினியின் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு தமிழக அளவில் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், அதற்கு நன்றி தெரிவித்து ட்வீட்டியுள்ளார் ரஜினிகாந்த்.
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரஜினி, “அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தைப் பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைத்தளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.