திமுக தலைவர் கருணாநிதிக்கு மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது என்று காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 28 ஆம் தேதி, திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகிறது.
4வது நாளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்த அறிக்கையினை காவேரி மருத்துவமனை இன்று வெளியிட்டது. அதில், ‘கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. கடந்த 29ஆம் தேதி ஏற்பட்ட உடல்நல பின்னடைவு காரணமாக, தொடர்ந்து அளிக்கப்படும் தீவிர சிகிச்சைக்கு கருணாநிதி முழு ஒத்துழைப்பு தருகிறார். இரத்தம், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. வயது காரணமாக மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது
திமுக தலைவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க முக்கிய தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கிறனர். இன்று, காவேரி மருத்துவமனைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். திமுக தலைவர் கருணாநிதி தூங்கிக் கொண்டிருந்ததால், அவரை பார்க்கவில்லை. விரைவில் அவர் உடல்நலம் சீராகி வர கடவுளை பிராத்திக்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.