This Article is From Jun 06, 2018

`காலா-வுக்கு நேரம் சரியில்லை!'- கர்நாடக முதல்வர் குமாரசாமி கருத்து

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள `காலா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகப் போகிறது

`காலா-வுக்கு நேரம் சரியில்லை!'- கர்நாடக முதல்வர் குமாரசாமி கருத்து

நாளை ரிலீஸ் ஆகிறது காலா

ஹைலைட்ஸ்

  • நாளை ரிலீஸ் ஆகிறது காலா
  • கே.எஃப்.சி.சி, காலா-வுக்கு தடை விதித்திருந்தது
  • கர்நாடக உயர் நீதிமன்றம், காலா-வை ரிலீஸ் செய்யச் சொல்லியுள்ளது
Bengaluru:

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள `காலா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகப் போகிறது. இந்நிலையில், `கர்நாடகாவில் காலா-வை ரிலீஸ் செய்ய நேரம் ஏதுவாக இல்லை' என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் கே.எஃப்.சி.சி, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு தடை விதித்தது. தமிழகத்துக்கு ஆதரவாக காவிரி விவகாரத்தில் ரஜினி பேசினார் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

காவிரி தொடர்பான விவகாரத்தில் தொடர்ந்து பிரச்னை நிலவி வந்த நிலையில், சென்ற மாதம் இறுதி தீர்ப்பை அறிவித்தது உச்ச நீதிமன்றம். அதன்படி, மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து காவிரி நீரை சரியான முறையில் பங்கிட்டுத் தர வேண்டும் என்று தெரிவித்தது நீதிமன்றம். இதையொட்டி கருத்து சொன்ன ரஜினி, `கர்நாடகாவில் எந்த அரசு பதவி ஏற்றாலும், தமிழகத்துக்குத் தேவையான நீரை சரியான முறையில் திறந்து விட வேண்டும்' என்று கூறினார். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து தான், காலா-வுக்கு தடை விதிப்பு போடப்பட்டது.

காலா தடைக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரஜினி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், `கர்நாடக மாநில அரசு காலா திரைப்படம் வெளியிடுவதையும் திரையரங்குகளுக்குத் தேவையான பாதுகாப்பையும் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கர்நாடக முதல்வர் குமாரசாமி, `ஒரு முதல்வராக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து காலா திரைப்படம் வெளியிடப்படுவதை உறுதிபடுத்துவேன். ஆனால், ஒரு கன்னடனாக இப்போது இந்தப் படம் வெளியாவதற்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். காவிரி விவகாரத்துக்கு முறையான தீர்வுக்குப் பின்னர் படம் வெளியாவது தான் சரியாக இருக்கும். நானும் ஒரு படத் தயாரிப்பாளர் என்கின்ற முறையில் தான் இந்தக் கருத்தை கூறுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

.