Rajini Thuglak Row: "பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் தண்ணீரை கலந்துவிடக் கூடாது. பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும்”
Rajini Thuglak Row: சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் இதழின் 50 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், துக்ளக் 50வது ஆண்டு விழா மலரை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசிய பேச்சுதான் இப்போது தமிழக அரசியலின் ஹாட்-டாபிக். நிகழ்ச்சியில் உரையாற்றிய வெங்கையா நாயுடு, ரஜினியிலன் அரசியல் என்ட்ரி பற்றியும் கிண்டல் செய்யும் தொனியில் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாயுடுவுக்கு முன்னர் சிறப்புரை ஆற்றிய ரஜினி, “சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது; தற்போதைய சூழலில் சோ போன்ற பத்திரிகையாளர் அவசியம் தேவை. சோவை பெரிய ஆளாக்கியது பக்தவத்சலம், கலைஞர் ஆகிய இருவர்தான். எமர்ஜென்சியை எதிர்த்ததால் தேசிய அளவில் அறியப்பட்டார் சோ. சோவைப் போலவே துக்ளக் இதழை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி.
கவலைகள் அன்றாடம் வரும்; அதை நிரந்திரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக் கொள்வதும் நமது கையில்தான். கவலையை நிரந்தரமாக்கிக் கொண்டால் நோயாளி. தற்காலிகமாக்கிக் கொண்டால் அறிவாளி.
பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் தண்ணீரை கலந்துவிடக் கூடாது. பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும்” என பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் பேசி அமர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து வெங்கையா நாயுடு பேசுகையில், “பொங்கல் பண்டிகை வரும்போது, நான் பொதுவாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது கிடையாது. பாஜகவின் தலைவராக நான் இருந்தபோது கூட, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன். எனக்கு அவ்வளவு முக்கியம் இந்தப் பண்டிகை நாள். ஆனால், இன்று துக்ளக் நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். காரணம், எனக்கு சோ ராமசாமி மீது அவ்வளவு பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது. தற்போது இதழின் ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி மீதும் அந்த மதிப்பு உள்ளது. இன்னொரு முக்கிய காரணம், இன்று ரஜினிகாந்த் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த காரணங்களுக்காகவே இன்று இங்கு வந்துள்ளேன்.
நான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவன். இப்போது நான் எந்த அரசியல் கட்சியோடும் இணைந்து அரசியல் களமாடுவது கிடையாது. நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளேன். ஆனால், நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இப்போதுதான் நுழையப் பார்க்கிறார். நான் மாணவனாக இருந்தபோது அரசியலில் நுழைந்து, இப்போது விலகியிருக்கிறேன். ஆனால், அவர் இப்போதுதான் உள்ளே வருகிறார்,” என்று சூசகமாக ரஜினியை சீண்டினார்.
திமுகவை சீண்டிய ரஜினியின் பேச்சுக்கு அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், “முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவர்ன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா- கால் நூற்றாண்டாக கால்பிடித்து காலம் கடத்தி ‘தலைசுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்,” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.