This Article is From Mar 13, 2020

ரஜினியின் அரசியல் பிரவேசம்: போட்டுத்தாக்கிய திருமாவளவன்!!

“நடிகர் ரஜினிகாந்த் சொல்வதைப் போல் எல்லாவற்றையும் சரி செய்துவிட்டு, சீர் செய்துவிட்டு அரசியலுக்கு வருகிறோம் என்று சொன்னால்..."

ரஜினியின் அரசியல் பிரவேசம்: போட்டுத்தாக்கிய திருமாவளவன்!!

"குட்டை, குளம் நாறுகிறது என்பதற்காக மீன்கள் தரையில் வாழ்வதில்லை"

ஹைலைட்ஸ்

  • நேற்று செய்தியாளர்களை சந்தித்து அரசியல் திட்டம் பற்றி பேசினார் ரஜினி
  • '3 அம்ச திட்டத்தை' அறிவித்துள்ளார் ரஜினிகாந்த்
  • கட்சிக்கும் ஆட்சிக்கும் தனித் தனித் தலைமை: ரஜினி

நேற்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வந்தால் செயல்படுத்தப் போகும் 3 திட்டங்கள் குறித்துப் பேசினார். 

ரஜினி, “முதலாவது திட்டம், தேவையில்லாத கட்சிப் பதவிகளை வைத்துக் கொள்ளாமல் இருப்பது. தேர்தலுக்கு மட்டும் பதவிகளை உருவாக்கி, ஆட்சிக்கு வந்தால் அந்தப் பதவிகள் நீக்குவது. பதவிகளில் அதிகம் பேர் நியமிக்கப்பட்டால் அது ஊழலுக்கு வழி வகுக்கிறது.

இரண்டாவது திட்டம், 50 வயதுக்குக் கீழே இருக்கும் இளைஞர்களுக்கும் பெரும்பான்மையான வாய்ப்புகளைக் கொடுப்பது. 

மூன்றாவது திட்டம், கட்சிக்கு ஒரு தலைமை. ஆட்சிக்கு ஒரு தலைமை,” என்று திட்டங்களை அறிவித்தார். ரஜினியின் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு தமிழக அளவில் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், அது பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சனக் கருத்தை முன்வைத்துள்ளார். 

அவர், “நடிகர் ரஜினிகாந்த் சொல்வதைப் போல் எல்லாவற்றையும் சரி செய்துவிட்டு, சீர் செய்துவிட்டு அரசியலுக்கு வருகிறோம் என்று சொன்னால், எந்தக் காலத்திலும் யாராலும் அரசியலுக்கு வர முடியாது. அதாவது, குட்டை, குளம் நாறுகிறது என்பதற்காக மீன்கள் தரையில் வாழ்வதில்லை. அந்தக் குட்டையில் இருந்துதான் அதை சுத்தம் செய்கின்றன. அதுபோலதான் அரசியலும் கூட. இறங்கிதான் சுத்தம் செய்ய வேண்டும். தற்போதைய சூழலில் அவர் அரசியல் கட்சித் தொடங்கப்போவதும் இல்லை. பொது வாழ்க்கைக்கு வரப்போவதுமில்லை,” என்று ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக விமர்சனக் கருத்தை வைத்துள்ளார்.


 

.