This Article is From Mar 13, 2020

ரஜினிகாந்தின் ‘3 அம்ச திட்ட’ அறிவிப்பு: வரவேற்று வாழ்த்திய சீமான்!!

"திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்"

ரஜினிகாந்தின் ‘3 அம்ச திட்ட’ அறிவிப்பு: வரவேற்று வாழ்த்திய சீமான்!!

"நாங்கள் உறுதியாக வெல்வோம்!”

ஹைலைட்ஸ்

  • ரஜினி, தனது எதிர்கால அரசியல் திட்டம் குறித்து இன்று பேசியுள்ளார்
  • 3 அம்ச திட்டம் பற்றி பேசியுள்ளார் ரஜினி
  • அதை வரவேற்று வாழ்த்தியுள்ளார் சீமான்

நடிகர் ரஜினிகாந்த், இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களைச் சந்தித்து, தனது அரசியல் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கினார். 

அரசியலுக்கான தனது மூன்று திட்டங்களை அறிவித்தார் ரஜினி. அதன்படி, முதலாவதாக, தேவையான அளவுக்கு மட்டுமே கட்சி நிர்வாகிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றார். இரண்டாவதாக, இளைஞர்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார். மூன்றாவதாக, கட்சிக்குத் தனி தலைமை, ஆட்சிக்குத் தனி தலைமை என்றார். 

தொடர்ந்து மாநிலத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக பற்றிப் பேசிய ரஜினி, “இப்போது நீங்கள் நினைக்கலாம். இதை ஏன் இப்போது சொல்கிறார்கள் என்று நினைக்கலாம். கட்சித் தொடங்கும்போது சொல்லலாமே என்று நினைக்கலாம். மனதிலிருந்து வரும் திட்டம் இது. உண்மைக்கான திட்டம் இது.

நாம் எதிர்ப்பது இரண்டு பெரிய ஜாம்பவான்களை… 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத ஒரு கட்சி. பெரிய ஆளுமை இல்லாத ஒரு நிலை. பண பலம், ஆள் பலம். அவர்களை எதிர்க்க வேண்டும்.

இன்னொரு பக்கம், ஆட்சியைக் கையில் வைத்திருக்கிறார்கள். குபேரனுடைய சொத்து கையில் உள்ளது.

இந்நிலையில், என்னை நம்பி வருபவர்களை என்னால் ஏமாற்ற முடியாது. முன்னரே அரசியலுக்கு வருவது பற்றி அறிவிப்பு வெளியிட்டுவிட்டேன். இப்போது நான் அரசியலிலிருந்து விலகிவிட்டால்… என்னைக் கோழை என்று சொல்வார்கள். பயந்துவிட்டார்கள் என்று சொல்வார்கள். அதனால்தான் இதை முதலில் மக்களிடம் சொல்ல நினைத்தேன்” என்றார்.

இந்நிலையில் ரஜினியின் இந்த முடிவு பற்றி நாம் தமிழர் கட்சியின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காகக் கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்!” என்று ட்வீட்டியுள்ளார். 

.