Chennai: விளம்பரம் நிறுவனம் ஒன்று லதா ரஜினிகாந்த் மீது கொடுத்துள்ள எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆட் பரே என்ற விளம்பர நிறுவனம், கோச்சடையான் படத்துக்கு லதா ரஜினிகாந்தின் கேரன்டியின் பேரில் 10 கோடி ரூபாய் வழங்கியிருந்ததாகவும், அதில் 6.2 கோடி ரூபாயை லதா ரஜினிகாந்த் இன்னும் தராததால் ஆட் பரே நிறுவனம் அவர் மீது புகார் அளித்தது.
இதற்கு முன் மார்ச் மாதம், தன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய தடை விதிக்குமாறு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த மனு செய்திருந்தார். உயர் நீதிமன்றமும் அதற்கு தடை விதித்திருந்தது. எனவே விளம்பர நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தது. இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்றம் “ இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. நீங்கள் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவீர்கள் என்று எண்ணி தான், நாங்கள் இந்த வழக்கை தாமதமாக எடுத்தோம். நீங்கள் வழக்கை எதிர்கொள்ளுங்கள், நிரபராதியாக இருந்தால் விடுவிக்கப்படுவீர்கள்” என்று கொஞ்சம் காட்டமாகவே கூறியுள்ளது.