This Article is From Mar 02, 2020

ரஜினியின் சமீபத்திய பேச்சுகள்… கமல் வைத்த டிவிஸ்ட்!!

“நேர்மையும் தெளிவான செயல் திட்டமும் கொண்டு முதல்வர் வேட்பாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களா?”

ரஜினியின் சமீபத்திய பேச்சுகள்… கமல் வைத்த டிவிஸ்ட்!!

ரஜினியின் இந்தக் கருத்தை கமல் வரவேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் ரஜினிகாந்த், சமீப காலமாகத் தொடர்ச்சியாகச் செய்தியாளர்களைச் சந்தித்து, பல்வேறு விஷயங்கள் குறித்து தனது கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகளைத் தெரிவித்து வருகிறார். அவர் சொல்லும் கருத்துகள் தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறிவரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், ரஜினியின் பேச்சு பற்றி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். 

மய்யம் தொடர்பான கூட்டம் ஒன்றில் பேசிய கமல், “தேவைப்பட்டால் ரஜினியோடு இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்வோம் என்று நான் முன்னரே சொல்லிவிட்டேன். அது குறித்து இப்போது மீண்டும் சொல்லத் தேவையில்லை. முதல்வர் வேட்பாளர் நானா, அவரா என்பது குறித்தெல்லாம் நாங்கள் பேசி முடிவெடுப்போம். அது குறித்து இப்போது எதையும் பேச வேண்டியதில்லை. ரஜினியின் சமீபத்திய கருத்து என்பது, தமிழக மற்றும் தேச நலனை முன்வைத்துச் சொல்லப்படுவதாகவே பார்க்கிறோம்,” என்றார்.

தொடர்ந்து, “நேர்மையும் தெளிவான செயல் திட்டமும் கொண்டு முதல்வர் வேட்பாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களா?” என்ற கேள்விக்கு, “அப்படி என் கண்ணில் யாரும் தென்படவில்லை. இது குறித்து யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என் கருத்தைத்தான் சொல்கிறேன். அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை,” என்றார். 

முன்னதாக டெல்லியில் நடந்த கலவரங்கள் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ரஜினி, “டெல்லியில் நடக்கும் போராட்டங்களுக்கு, மத்திய உளவுத்துறையின் தோல்வியே முக்கிய காரணம். இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டிக்கிறேன். டிரம்ப் போன்ற உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது மத்திய உளவு அமைப்புகள் மிகுந்த கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். 

டெல்லி வன்முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியிருக்க வேண்டும். இனிமேலாவது ஜாக்கிரதையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். உளவுத்துறை தோல்வியடைந்திருக்கிறது என்றால் அது உள்துறையின் தோல்வி என்று பொருள் கொள்ள வேண்டும்,” என்றார். ரஜினியின் இந்தக் கருத்தைக் கமல் வரவேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

.