This Article is From May 10, 2019

7 பேரை விடுவிக்க கவர்னர் காலம் தாழ்த்தினால் பிரச்னை எழும்! ஸ்டாலின் எச்சரிக்கை!!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் 7 பேரை விடுவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

Advertisement
தமிழ்நாடு Written by

7 பேரை விடுவிப்பது என்பது தற்போது தமிழக கவர்னரின் அதிகாரத்தில் உள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுவிக்க காலம் தாழ்த்தாமல் முடிவு எடுக்குமாறு கவர்னர் பன்வாரி லால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

28 வருடங்களாக தொடர்ந்து சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்கள் தலைமையிலான அமர்வு, தள்ளுபடி செய்திருப்பதை வரவேற்கிறேன். 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் - ஒட்டுமொத்த தமிழக மக்களின் சார்பிலும் இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக தொடர்ந்து உரிய இடங்கள் அனைத்திலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி, மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்து விட்டது. கடந்த எட்டு மாதங்களாக முக்கியமான அந்தத் தீரமானத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

அரசியல் சட்டப்பிரிவு 161-ன் கீழும், மனித நேய அடிப்படையிலும் முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றுள்ள மாண்புமிகு ஆளுநர் அவர்கள், அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது உரிய காலத்தில் உத்தரவு பிறப்பிக்காமல் தேவையில்லாமல் தாமதப்படுத்தி வருகிறார் என்பது மிகுந்த கவலைக்கும் வேதனைக்கும் உரியது.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினைக் காரணம் காட்டி இந்தக் கோப்பின் மீது நடவடிக்கை எடுக்க மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தயங்குகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், இந்த விடுதலைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கினை உச்சநீதிமன்றமே இப்போது டிஸ்மிஸ் செய்திருப்பது, இருட்டறையில் முடிவில்லாமல் வாடும் ஏழு பேரின் எதிர்கால வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்றைத் தோற்றுவித்திருக்கிறது.

அரசியல் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் கீழ் முடிவு எடுக்க, ஆளுநர் அவர்களுக்கு இனி எந்தத் தடையும் இல்லை. வேறு எந்தக் காரணத்தையும் சொல்ல வழியும் இல்லை. எனவே பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு, உடனடியாக அந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். 

இனியும் காலம் தாழ்த்தினால், இட்டுக்கட்டிய பிரச்னைகள் எழக்கூடும் என்பதையும் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்குச் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement