This Article is From Mar 01, 2020

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒலித்த 'கோலி மாரோ' முழக்கம் - 6 பேர் கைது!!

சம்பவம் நடந்ததும் உடனடியாக மெட்ரோ ரயில் நிலைய பணியாளர்களும், காவலர்களும் முழக்கம் எழுப்பியவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒலித்த 'கோலி மாரோ' முழக்கம் - 6 பேர் கைது!!

பரபரப்பாக காணப்படும் டெல்லி ராஜிவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையம்.

ஹைலைட்ஸ்

  • டெல்லி ராஜிவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையத்தில் சம்பவம் நடந்துள்ளது
  • ரயில் வந்திறங்கியதும் கோலி மாரோ என்று முழக்கம் எழுப்பியுள்ளனர்
  • வளாகத்திற்குள் போராட்டத்திற்கு அனுமதியில்லை என்கிறது மெட்ரோ நிர்வாகம்
New Delhi:

டெல்லியில் வன்முறை தணிந்து வரும் நிலையில் பரபரப்பாகக் காணப்படும் ராஜிவ் சவுக் மெட்ரோ ரயில்நிலையத்தில் 'துரோகிகளைச் சுட்டுத் தள்ளுங்கள்' எனப் பொருள்படும் 'கோலி மாரோ' என்று சில முழக்கம் எழுப்பினர். இதனால் அங்குப் பதற்றம் காணப்பட்டது.

சம்பவம் நடந்ததும் உடனடியாக மெட்ரோ ரயில் நிலைய பணியாளர்களும், காவலர்களும் முழக்கம் எழுப்பியவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் வெள்ளை நிற டீ சர்ட்டும் தலையில் ஆரஞ்சு நிற டர்பனும் அணிந்திருந்தனர். மேலும் அவர்கள் 'தேஷ் கே கட்டாரோன் கோ, கோலி மாரோ' என்று முழக்கம் எழுப்பினர். இதற்கு நாட்டுக்குத் துரோகம் செய்த தேசத் துரோகிகளைச் சுட்டுத் தள்ளுங்கள் என்று பொருள். 

இந்த பரபரப்பைக் கிளப்பிய 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 


கோலி மாரோ என முழக்கம் எழுப்பப்பட்டதும், சம்பந்தப்பட்டவர்களை மெட்ரோ ரயில் பணியாளர்கள், பாதுகாவலர்கள் பிடித்து உடனடியாக மெட்ரோ ரயில் போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.

காலை 10.52 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மெட்ரோ ரயில் வளாகத்திற்குள் இதுபோன்ற எந்தவொரு சர்ச்சை செயலில் ஈடுபட அனுமதியில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில், நிலையத்திற்கு வந்து நின்றபோது முழக்கம் எழுப்பப்பட்டதாக பி.டி.ஐ. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

ரயில் நிறுத்தப்பட்டதும் தொடர்ச்சியாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முழக்கம் எழுப்பப்பட்டுள்ளது. துரோகிகளைச் சுட்டுத் தள்ள வேண்டும், இந்திய நாட்டின் இளைஞர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

வடகிழக்கு டெல்லியில் வன்முறை ஏற்பட்டபோது இதேபோன்ற கோஷங்கள்தான் எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கலவரத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். 

கோலி மாரோ என்ற வாசகம் டெல்லியில் சமீபகாலமாகச் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இதே வாசகத்தைப் பயன்படுத்தினார். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்குச் சற்று முன்பாக மத்திய அமைச்சர் இந்த வாசகத்தைப் பிரசாரத்தில் பயன்படுத்தியதால் பெரும் சர்ச்சை வெடித்தது. 

இதேபோன்று, மற்றொரு பாஜக தலைவர் அபே வர்மா கோலி மாரோ என்று கூறியவாறே தெருவில் பேரணி நடத்தினார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

.