This Article is From Feb 12, 2019

‘சாகும் வரை சிறையிலேயே உண்ணாவிரதம்!’- முருகன், நளினி அறிவிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேர் சிறையில் உள்ளனர்

Advertisement
தமிழ்நாடு Posted by

எழுவர் விடுதலை குறித்து, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்

Highlights

  • எழுவர் விடுதலைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது
  • அதற்கு ஆளுநர் புரோகித் நடவடிக்கை எடுக்கவில்லை
  • இதனால், எழுவரையும் விடுதலை செய்வதில் இழுபறி நிலவி வருகிறது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான நளினி மற்றும் முருகன் ஆகியோர் வேலூரில் உள்ள மத்திய சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராடியும் வலியுறுத்தியும் வருகின்றனர்.

எழுவர் விடுதலை குறித்து, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். அவரின் இந்த செயலற்றத் தன்மைக்கு பல தரப்பினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையின் இன்று முதல் சிறையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் நளினி மற்றும் முருகன். முருகன் ஆளுநர் புரோகித்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘எங்கள் இருவருக்கும் விடுதலை கொடுங்கள் அல்லது, கருணை கொலைக்கு அனுமதி கொடுங்கள். தமிழக அமைச்சரவை எங்கள் விடுதலைக்கு ஒப்புதல் தெரிவித்து 5 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், இதுவரை அது குறித்து எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாங்கள் இருவரும் நிரபராதிகள். எங்களுக்கு வேண்டுமானால் உண்மை அறியும் சோதனை நடத்துங்கள். நாங்கள் 28 ஆண்டுகள் சிறையில் இருக்கிறோம். எங்கள் குழந்தை பிரிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக ஆகின்றன. கடைசியாக 12 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அவரைப் பார்த்தோம்' என்று கதறியுள்ளார். 

Advertisement


 

Advertisement