தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் அரசு மருத்துவமனைகளின் செயல் திறன் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஆக இருந்த மருத்துவர் ஜெயந்தி விடுப்பில் சென்றுள்ளார்.
ஜெயந்திக்கு பதில் மருத்துவ கல்வி இயக்குநர் மருத்துவர் நாராயணசாமி தற்போது டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் “கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் வேளையில், கொரோனாவுக்கான சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி அவர்கள் திடீரென விடுமுறையில் சென்றிருக்கிறார். அதற்கான காரணம் என்னவென்று தெளிவாகக் கூறப்படவில்லை. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் குழப்பம் நிலவிவரும் சூழலில், இந்த விடுமுறை பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.“ என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.