எல்லை பாதுகாப்பு படையின் கண்காணிப்பு கருவிகளை பார்வையிடும் ராஜ்நாத் சிங்
Dhubri (Assam): Balakot air strike: பாகிஸ்தானின் பாலகோட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், '300 மொபைல்களை மரங்களா பயன்படுத்தியது?' என்று ராஜ்நாத் சிங் (Rajnath Singh) எதிர்க்கேள்வி கேட்டுள்ளார்.
விமானப்படை தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக பாலகோட்டில் 300 மொபைல்கள் ஆக்டிவாக இருந்தது என்று தேசிய தொழில்நுட்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி ராஜ்நாத் சிங் எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.
விமானப்படை தாக்குதல் நடத்திய விவகாரத்தில் தாக்குதல் குறித்த ஆதாரங்களை வெளியிடுமாறும், கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கையை வெளியிடுமாறும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் அசாமுக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கு, நவீன கண்காணிப்பு கருவிகளை ஆய்வு செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் என்பது அதிகாரப்பூர்வமான அமைப்பு. அவர்கள் செய்த ஆய்வுப்படி, விமானப்படை தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாக பாலகோட்டில் 300 செல்போன்கள் ஆக்டிவாக இருந்துள்ளன. அவற்றை அங்குள்ள மரங்களா பயன்படுத்தியிருக்கும்?
இவ்வாறு அவர் கூறினார். முன்பு ஒருமுறை அவர் அளித்த பேட்டியில், கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை வேண்டுமானால், காங்கிரஸ் கட்சியினர் பாலக்கோட்டிற்கு சென்று கணக்கு எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறியிருந்தார்.