மேலும் 4 குழுக்களில் ராஜ்நாத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹைலைட்ஸ்
- ராஜினாமா செய்வதாக கூறியதை தொடரந்தே பொறுப்புகள் வழங்கப்பட்டதாக தகவல்
- ராஜ்நாத் சிங் மொத்தமுள்ள 8 குழுக்களில் 6 குழுக்களில் இடம்பெற்றுள்ளார்
- உள்துறை அமைச்சர் அமித்ஷா 8 குழுக்களிலும் இடம்பெற்றுள்ளார்
New Delhi: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 மத்திய அமைச்சரவைக் குழுக்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக நேற்று வெளிவந்த தகவலை தொடர்ந்து, பெரும் சர்ச்சைகள் எழுந்தன.இதைத்தொடர்ந்து, ராஜ்நாத் சிங் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மிரட்டல் விடுத்ததாகவும் தகவில்கள் வெளியாகின. எனினும், ராஜ்நாத் சிங் அலுவலகம் அந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மோடி அரசு அமைத்துள்ள 8 மத்திய அமைச்சரவைக் குழுக்களில், 6 குழுக்களில் ராஜ்நாத் சிங் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அனைத்துக் குழுக்களிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருக்கிறார். பிரதமர் மோடி 6 குழுக்களில் உள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7 குழுக்களில் உள்ளார். ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் 5 மத்தியக் குழுக்களில் இடம் பிடித்துள்ளார். ஆனால், ராணுவத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், வெறும் 2 குழுக்களில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, மோடி தலைமையிலான முதல் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தார் ராஜ்நாத் சிங். இந்த முறை அவர் கேபினட் கமிட்டி மற்றும் பொருளாதார விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு கமிட்டியில் மட்டுமே இடம் பிடித்தார். அவர், மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும் அரசியல் விவகாரங்கள் கமிட்டியில் சேர்க்கப்படவில்லை.
மத்திய அரசில் மிகவும் முக்கியமான பொறுப்பில் இருப்பதாக பார்க்கப்படும் ராஜ்நாத் சிங், இவ்வாறு முக்கிய அமைச்சரவைக் குழுக்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளது விவாதப் பொருளாக மாறியது.
இதைத்தொடர்ந்து, அமைச்சரவைக் குழுக்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, மேலும் 4 குழுக்களில் ராஜ்நாத் சிங் சேர்க்கப்பட்டார். அதாவது, நாடாளுமன்ற விவகாரங்கள், அரசியல் விவகாரகள், முதலீடு மற்றும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு உள்ளிட்ட அமைச்சரவைக் குழு கமிட்டியில் ராஜ்நாத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
பொருளாதார விவகாரங்களுக்கான கமிட்டியை பிரதமர் மோடி தலைமை தாங்கி வழிநடத்துவார். அதில் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், சதாநந்தா கவுடா, நரேந்திர தோமர், ரவிஷங்கர் பிரசாத், ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஜெய்ஷங்கர், தர்மேந்திர பிரதான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திர தோமர், ரவிஷங்கர் பிரசாத், ராம் விலாஸ் பஸ்வான், தாவர் சந்த் கெலோட், பிரகாஷ் ஜவடேகர், பிரலாகத் ஜோஷி ஆகியோர் உள்ளனர். இதில் தற்போது ராஜ்நாத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுவில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்ஷங்கர் ஆகியோர் இருக்கின்றனர்.
முதலீடு மற்றும் வளர்ச்சி கமிட்டியில் பிரதமர் மோடி, அமித்ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் ஆகியோர் உள்ளனர்.
வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு கமிட்டியில் பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், நரேந்திர தோமர், பியூஷ் கோயல், ரமேஷ் போக்ரியால், தர்மேந்திர பிரதான், மகேந்திர நாத் பாண்டே, சந்தோஷ் கங்காவார், ஹர்தீப் சிங் புரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.