This Article is From Aug 13, 2018

கேரள கனமழை: 8,000 கோடி ரூபாய் அளவில் சேதாரம்… 10 ஃபேக்ட்ஸ்!

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்றார்

ஹைலைட்ஸ்

  • 14-ல், 8 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை
  • ராணுவம்,விமான படை,கடற்படை,பேரிடர் படை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது
  • 15 ஆம் தேதி வரை கனமழை தொடரும் எனத் தகவல்
Thiruvananthapuram:

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்றார். வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர், ‘இதுவரை இல்லாத அளவிலான பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிவாரண உதவியாக 100 கோடி ரூபாய் கொடுக்கப்படும்’ என்று அறிவித்தார். கேரள அரசு, மழையால் இதுவரை 8,000 கோடி ரூபாய்க்குச் சேதாரம் ஆகியுள்ளதாக கணக்கிட்டு கூறியுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் அம்மாநிலத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கிருக்கும் 14 மாவட்டங்களில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட 60,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வரும் 15 ஆம் தேதி வரை கேரளத்தில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

10 ஃபேக்ட்ஸ்:

‘நானும் கேரள முதல்வர் பினராயி விஜயனும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டோம். அதிலிருந்து மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். கேரள அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

முதல்வர் பினராயி விஜயன், ராஜ்நாத் சிங் வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், உடனடி நிவாரண நிதியாக 1,200 கோடி ரூபாயை அவர் மத்திய அரசிடம் கேட்டுள்ளார். மழை பாதிப்புகளை கணக்கிட்டதில் இதுவரை, 13,200 கோடி ரூபாய்க்குச் சேதாரம் ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

26 ஆண்டுகள் கழித்துத் திறந்துவிடப்பட்ட இடுக்கி அணையின் கொள்ளளவும் நேற்று காலை 2399.10 அடியாக குறைந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு, மாநிலத்தில் இருக்கும் 25 அணைகளை கேரள அரசு திறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

‘நீர்பிடிப்புப் பகுதிகளில் இன்று மழை அளவு குறைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை, உஷார் நிலையில் இருப்போம்’ என்று அரசு உயர் அதிகாரியான பி.எச்.குரியன் ராய்டர்ஸ் செய்தி ஊடகத்திடம் தகவல் கூறியுள்ளார்.

கடலோரம் இருக்கும் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரிச்சூர், வயநாடு, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கடற்படை, ராணுவப் படை, விமானப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

இடுக்கி அணையிலிருந்து பெரியாறு நதிக்கு, ஒரு வினாடிக்கு 7.5 லட்சம் லிட்டர் நீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து, திரிச்சூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. அதேபோல வயநாடு மாவட்டத்தில், 1000 ஹெக்டர்களுக்கு மேலான பயிர்கள் நாசமாகியுள்ளது.

மேலும், 20000 வீடுகள் மற்றும் 10,000 கிலோ மீட்டர் அளவிலால சாலைகள் மழை காரணமாக பாதிப்படைந்துள்ளது. 

திரிச்சூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இருந்து மட்டும், 10000 பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 1924 ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளாவில் இப்போது பெய்து வரும் மழை தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மழை காரணமாக உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கும், வீட்டை இழந்தவர்களுக்கும் 4 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும், வீடு மற்றும் நிலத்தை இழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 

.