கடந்த 5 ஆண்டுகளில் காஷ்மீரை தவிர்த்து மற்ற எந்த பகுதியிலும் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல்கள் நடக்கவில்லை என்கிறார் ராஜ்நாத்.
New Delhi: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் கே.சுரேஷ் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். அங்கு கடந்த சில நாட்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதாக அவர் கூறினார்.
காஷ்மீரில் பதற்றம் காணப்பட்டு வரும் நிலையில், அங்கு எதுவுமே நடக்காதது போன்ற தகவல்களை மத்திய அரசு அளித்துக் கொண்டிருப்பதாகவும் கே. சுரேஷ் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது-
ஜம்மு காஷ்மீரில் கடந்த 30-35 ஆண்டுகளாக தீவிரவாதம் தலைதூக்கி காணப்பட்டது. இதனை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர். இன்றைக்கு ஏறக்குறைய தீவிரவாதம் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் காஷ்மீரை தவிர்த்து மற்ற எந்த பகுதியிலும் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல்கள் நடக்கவில்லை.
இவ்வாறு ராஜ்நாத் கூறினார். இந்த பதிலில் திருப்தி அடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காஷ்மீரில் முழு அமைதி ஏற்படுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கடந்த வாரம் மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை முற்றிலும் திரும்பி விட்டது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால் இன்டர்நெட் இணைப்பு மட்டும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்று கூறியிருந்தார்.