This Article is From Jun 01, 2019

தேசிய போர் நினைவு சின்னத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக நியிமிக்கப்பட்டதை தொடர்ந்து, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Rajnath Singh போர் நினைவு சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

New Delhi:

பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் இன்று பொறுப்பேற்க உள்ள நிலையில், டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்துக்கு சென்று உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, கப்பல் படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோரும் ராஜ்நாத் சிங் உடன் இருந்தனர்.

இதுதொடர்பாக நேற்று ராஜ்நாத் சிங் அவரது டிவிட்டர் பதிவில் கூறியதாவது, போர் நினைவு சின்னத்துக்கு நாளை காலை செல்ல உள்ளேன். அங்கு நாட்டிற்காக உயிர் நீத்த நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்திய பின்னர் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன் 54 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு, நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட்டது.

உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு தற்போது பாதுகாப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து, ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்க உள்ளார்.

.